மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய அம்மாநில காங்கிரஸ் அளிக்க முன்வந்த ஆஃபரை தேர்தல் பிரசார யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியதைத் தொடர்ந்து அவரது ஆதரவாலர்களான எம்.எல்.ஏக்கள் பலரும் காங்கிரஸ் இருந்து விலகியதால் அம்மாநிலத்தில் பல சட்டமன்றத் தொகுதிகள் காலியானது.
இந்த நிலையில், தேர்தல் பிரசார யுக்தி நிபுணராகா அறியப்படும் பிரசாந்த் கிஷோர், மத்தியப் பிரதேச காங்கிரஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அம்மாநில காங்கிரஸ் கட்சி அளித்த ஆஃபரை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனை பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் ஊடகங்களிடம் கூறுகையில், “முன்னாள் முதல்வர் கமல்நாத் மட்டுமல்ல, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் பிரசார யுக்தியை ஏற்க என்னை அணுகினார். ஆனால், நான் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சிப் பணிகளை துண்டுத் துண்டாக எடுக்க நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமான ஒரு தேர்தல் பிரசார யுக்தி நிபுணராக பிரசாந்த் கிஷோர் அறிமுகமானார். பின்னர், அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரசாந்த் கிஷோர் பாஜக உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான பிரச்சார யுக்தியை பிரசாந்த் கிஷோர் முன்னெடுத்தார். இந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றி கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி சாதனை முடிவுகளை பிரதிபலித்தது.
இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசார வியூகம் அமைத்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். அதே போல, தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு ஆதரவாக அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் வியூகம் அமைத்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார்.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு தனது தேர்தல் பிரசாரம் வியூகம் மூலம் பெரும் வெற்றி பெற வைத்த பிரசாந்த கிஷோர், பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் காங்கிரஸ் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளின் மகா கூட்டணியிம் மிகப்பெரிய வெற்றிக்கும் தேர்தல் பிரசார யுக்தியை கையாண்டார். இதையடுத்து நிதிஷ்குமாரின் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார்.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்ட, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் 2017-ம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பரவலாக மாறுபட்ட முடிவுகளை அளித்தன. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணியும் பாஜகவிடம் தோல்வியடைந்த நிலையில், பஞ்சாப்பில் மட்டும் அக்கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனால், காங்கிரஸ் கட்சி உடன் பிரசாந்த் கிஷோர் உறவில் இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு நீண்ட கால அளவில் செயல்பட விரும்புகிறார். அவர் காங்கிரஸ் கட்சியுடன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியாக செயல்பட விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “பிரசாந்த் கிஷோரின் உணர்வுகளை நாங்கள் அறிவோம். பிரசாந்த் கிஷோருக்கான அழைப்பை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டும்தான் விடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் முதல்வர்களோ, முன்னாள் முதல்வர்களோ இந்த முடிவை எடுக்க முடியாது” என்று கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.