பாட்னாவின் பெய்லி சாலையில் உள்ள ஷேக்புரா மாளிகை வரவேர்பரையில், குறிப்பேடுகள் மற்றும் பேனாவுடன் இளைஞர்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்து, ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல்வர் நிதீஷ் குமார், ஆர்.ஜே.டி கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளதால், பீகாரில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கு, சில கிலோமீட்டர் தொலைவில், பிர்சந்த் படேல் சாலையில் உள்ள தங்கள் கட்சி அலுவலகத்தில் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, பங்களாவின் கதவுகள் திறக்கப்பட்டு, சமீப காலங்களில் இந்தியாவில் மிக அதிகமாகத் தேடப்பட்ட தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் வெளியே வந்தார். பீகார் மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் குறித்த அவருடைய கருத்துகளுக்காக ஊடகவியலாளர்கள் உள்ளே காத்திருக்கும்போதும் அடுத்த ஒன்றரை மணி நேரம் ஆர்வமாக காத்திருக்கும் இளைஞர்களிடம் அவர் உரையாற்றுகிறார். முன்னாள் ஜேடி(யு) தேசிய துணைத் தலைவருக்கு இது ஒரு பரபரப்பான நாள்.
உண்மையில், பிரசாந்த் கிஷோர் சொந்தமாக கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான வேலையைச் செய்வதில் மே மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டது. ஜே.பி இயக்கத்தின் போது வந்த முகங்களைச் சுற்றி நீண்ட காலமாக அரசியல் சுழலும் ஒரு மாநிலத்தில் புதிய வீரராக உள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் அரசியல் கட்சி - 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - அக்கட்சி 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“நாங்கள் பீகார் அரசியலை மேலே இருந்து பார்த்து வருகிறோம், இப்போது களமிறங்குவதற்கான நேரம் இது” என்று பிரசாந்த் கிஷோர் குழுவின் உறுப்பினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ‘ஜன் சுராஜ்’ இயக்கத்தின் மூலம், பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே தனது கட்சியை வடிவமைக்கத் தொடங்கிவிட்டார். இது பீகாருக்கு ஒரு அரசியல் மாற்றாக ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு உயரும் என்றும் இது பீகார் வளர்ச்சியடையாததற்குப் பின்னால் உள்ள சில முக்கிய பிரசனைகளுக்கு தீர்வு காணும் முயற்சி என்று அவர் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் தனது கட்சியை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஏற்கனவே பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 150-200 பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். அவர் மக்களைச் சந்திக்க அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் பாதயாத்திரை மூலம், மாநிலம் முழுவதும் சென்று ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் தொகுதிகளையும் அடைவார்.
பிரசாந்த் கிஷோரின் கருத்துப்படி, இந்த பாதயாத்திரை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து கட்சி தொடங்கப்படும்.
இந்தப் முயற்சி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், மாநிலம் முழுவதிலுமிருந்து அரசியலுக்கு வரவேண்டிய சரியான நபர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில், பீகாரில் 67 சதவீத மக்கள் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒன்றை விரும்புவதாகவும், கடந்த 30 ஆண்டு ஆட்சி செய்த அரசாங்கங்களில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மாற்றத்தை எதிர்பார்ப்பவரகளில் 30 சதவீதம் பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் தனது திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கான தொலைபேசி எண்ணை அறிவித்தார். பிரசாந்த் கிஷோர் குழுவின் கருத்துப்படி, இந்த இயக்கம் தொடங்கப்பட்ட மே 2 ஆம் தேதி 17,000 பேர் இந்த எண்ணுக்கு அழைத்தனர். இன்றைய நிலவரப்படி, அவர்கள் 75,000 பேரிடம் அழைப்புகள் பெறப்பட்டுள்ளது என்று பிரசாந்த் கிஷோர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த இயக்கத்தின் டிஜிட்டல் தளங்களான பாத் பிஹார் கி, ஜன் சுராஜ் மற்றும் ரசிகர் மன்றம் மூலம் பிரசாந்த் கிஷோர் சுமார் 25 லட்சம் மக்களைச் சென்றடைய முடிந்தது என்று அவரது குழு உறுப்பினர்கள் கூறினர். “டிஜிட்டல் அரங்கில் இந்த மூன்று தளங்களையும் தாண்டிச் சென்றால், 75 லட்சம் முதல் 1 கோடி பேர் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்” என்று பிரசாந்த் கிஷோர் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 8 அன்று, சிவனில் ‘ஜன் சுராஜ் அபியான் சமிதி’ என்ற தொகுதி அளவிலான குழு அமைக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும், ஒவ்வொரு தொகுதியிலும் 40-50 உறுப்பினர்களைக் கொண்ட இத்தகைய குழுவை அமைக்க குழு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரசாந்த் கிஷோரின் முயற்சி ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் சோதனைகளின் வரிசையில் இருப்பதாகத் தோன்றினாலும், அவரது குழு உறுப்பினர்கள் அதுபோன்ற எந்த ஒற்றுமையையும் மறுத்தனர். ஆம் ஆத்மியின் இயக்கம் டெல்லியை சார்ந்தது என்றும் பீகார் முற்றிலும் மாறுபட்ட சவால்களை வழங்கியது என்றும் கூறினர்.
பீகார் போன்ற சமூகத்தில் தனது கட்சி எப்படி சாதிகளைத் தாண்டி மேலே உயரும் என்று அவர் எதிர்பார்த்தார் என்று பிரசாந்த் கிஷோர் முன்பு கூறியிருந்தார்: “சாதி மட்டுமே வாக்களிப்பதைத் தீர்மானிக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது ஒரு முக்கிய அம்சம். மக்கள் வாக்களிக்கும்போது, பல காரணிகள் உள்ளன… 1989 முதல் 2019 வரையிலான பல தேர்தல்கள் சாதி எல்லைகளைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளன. ஒரு விஷயம் மக்களின் கற்பனையை கவர்ந்தால், சமூகம் சாதி அரசியலுக்கு அப்பால் உயரும் திறன் கொண்டது. எல்லா சாதியிலிருந்தும் சரியான ஆட்கள் கிடைத்தால், அது தானாகவே பிரதிநிதித்துவமாக இருக்கும்.” என்று கூறினார்.
ஜன் சுராஜ் இயக்கத்தைத் தொடங்கிய பின்னர், தனது செய்தியாளர் சந்திப்புகளில் பிரசாந்த் கிஷோர் அடிக்கடி தனது முயற்சிகள் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸால் தொடங்கப்பட்ட இயக்கத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பிறகு, பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல்களை நிர்வகிக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்ய முடிவு செய்ததாக அறிவித்தார்.
சரியாக ஒரு வருடம் கழித்து, காங்கிரஸிலிருந்து வந்த வாய்ப்பை நிராகரித்த பிறகு, பிரசாந்த் கிஷோர் தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அறிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.