Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னர் வந்த செய்தி கீழே:
வாஜ்பாய் நலம் பெற பிரார்த்தனை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல், லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகள் வாஜ்பாய் நலம் பெற வேண்டி உருக்கமுடன் பிரார்த்தனை செய்துள்ளனர்.