கடந்த மாதம் பிற்பகுதியில் இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில், கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிபொருள் வைத்ததால் கர்ப்பிணி பசு மாடு ஒன்று காயம் அடைந்தது. இது தொடர்பாக அம்மாநில போலீசார் நேற்று ஒருவரை கைது செய்துள்ளனர்.காயமடைந்த பசுவின் நிலையை வீடியோவாக பசுவின் உரிமையாளர் குர்தியால் சிங் நேற்று வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடும் பேசும் பொருளாகி வந்தது.
Advertisment
இதேபோன்ற ஒரு சம்பவத்தினால், கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று மரணமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மே 25-ம் தேதி, இரவு 8 மணியளவில் ஜண்டுட்டா தாலுக்காவில் உள்ள தஹாத் கிராமத்தில், இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
" புதர்களால் மூடப்பட்ட அண்டை வயல்களில் பசு மேய்ந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அங்கு, யாரோ கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிபொருட்களை வைத்திருக்கின்றனர். பசு கலவையை உட்கொண்ட போது, வெடித்துள்ளது. இதனால் அதன் தாடை மற்றும் வாயின் பிற பகுதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது" என்று ஒரு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த பசுவுக்கு குர்தியால் சிங் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். ஜண்டுட்டா காவல் நிலையத்தில் இது தொடர்பான வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த இரக்கமற்ற செயலை வெளிபடுத்தும் வீடியோ ஒன்றை இணையத்தில் நேற்று பசுவின் உரிமையாளர் பதிவேற்றினார். அந்த வீடியோவில் ,"அண்டை வீட்டுக்காரர் வேண்டுமென்றே மாவு உருண்டைக்குள் வெடிபொருள் வைத்து தனது பசுவுக்கு உணவளித்ததாகவும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குற்றம் சாட்டினார். காயமடைந்த விலங்கின் வாயிலிருந்து ரத்தம் சொட்டுவதைக் கண்ட நெட்டிசன்கள் உணர்வை வெளிப்படுத்தியதால் வீடியோ பேசும் பொருளானது. தற்போது, பசுமாடு நல்ல நிலையில் இருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியமான கன்றுக்குட்டியை ஈன்றெடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்தே கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியதாக காவல்துறை தெரிவித்தது. காயங்களை ஆராயும்போது, பசுவின் வாய்க்கு வெளியே வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும், சம்பவம் தொடர்பான அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 (வெடிபொருளின் பொருட்டு கவனக்குறைவான செய்கை) 429 (மிருகங்களை முடமாக்குதல் ) விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் 11 வது பிரிவின் கீழ் (விலங்குகளை கொடூரமாக நடத்துதல்) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலாஸ்பூர் எஸ்.பி. தேவகர் சர்மா தெரிவித்தார். வெடி பொருட்களின் தன்மையைப் பற்றி தெரிந்து கொள்ள தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil