ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல் நிலையத்திற்குட்பட்ட பரியநாத் பகுதியை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேத்தா, மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது. இவர் நிதி நிறுவனம் மூலம் டிராக்டர் ஒன்று வாங்கியுள்ளார். இதற்கான கடன் தொகை திரும்ப செலுத்தாத நிலையில், கடன் வசூல் முகவர் டிராக்டரை எடுத்து சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையினர் கூறுகையில், "கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. வியாழன் அன்று மேத்தாவின் மொபைல் போனுற்கு மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில், டிராக்டர் வாங்கியதற்கான கடனில் ரூ. 1.3 லட்சம் நிலுவை தொகை உள்ளது. அதை திரும்ப செலுத்துமாறு மெசேஜ் வந்துள்ளது. மேலும், கடன் தொகை செலுத்தாவிட்டால் டிராக்டர் எடுத்துச் சென்று விடுவதாகவும் மிரட்டியுள்ளது.
டிராக்டர் NH-33 அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேத்தா உடனடியாக டிராக்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால் அதற்குள் கடன் வசூல் முகவர் அந்த இடத்திற்கு வந்து டிராக்டர் ஓட்டி செல்வதைக் கண்டார்.
டிராக்டரை பின்தொடர்ந்து ஓடி ரூ. 1.2 லட்சம் உடனடியாக செலுத்த தயாராக இருப்பதாக மேத்தா முகவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் முழு தொகையையும் திரும்ப செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேத்தாவின் 27 வயது மகள் 3 மாத கர்ப்பிணியும் டிராக்டரை பின்தொடர்ந்து ஓடி முகவரிடம் கேட்டுள்ளார்.
இவர்கள் பேச்சை கேட்க மறுத்து டிராக்டரை முகவரி தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்த பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்" என்று எஸ்பி தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து ஏராளமான கிராம மக்கள், பெரும்பாலும் பெண்கள் ஹசாரிபாக் ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த கர்ப்பிணி உடலை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நிறுவன மேலாளர் மற்றும் கடன் வசூல் முகவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து, குற்றம்புரிந்தவர்களை கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே கூறுகையில், "தனியார் நிதி நிறுவனத்தின் கடன் வசூல் முகவர் மற்றும் மேலாளர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைகிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும். மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனத்தை பயன்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“