ஒடிஷா மாநிலத்தில் தேவையான ஆவணங்கள் இல்லாததால், அரசு மருத்துவமனை சிகிச்சை மறுத்ததன் காரணமாக, கழிவுநீர் கால்வாயில் பழங்குடி பெண் குழந்தை பெற்ற சம்பவம் சமீபத்தில்தான் நடைபெற்றது.
இந்த வேதனை சம்பவத்திற்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், மற்றொரு மருத்துவ அலட்சியம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை தர மறுத்ததால், வயல்பரப்பில் திறந்த வெளியில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திந்தோரியில் பிரசவத்திற்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம், மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக கூறி அங்கிருந்து அனுப்பிவிட்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, அப்பெண் அருகிலிருந்து வயல்பரப்பில் திறந்தவெளியில் குழந்தையை பெற்றெடுத்தார். அருகிலிருந்தவர்கள் அப்பெண்ணின் சேலை மூலம் திரை கட்டி, குழந்தையை பெற்றெடுக்க உதவியுள்ளனர். அக்குழந்தை நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அந்த அரசு மருத்துவமனை, அப்பெண்ணையும் குழந்தையையும் அனுமதித்தது.
இச்செய்தி ஊடகங்களில் பரவியவுடன், உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.