12 வயதிற்குள் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் கத்துவா பகுதியில், 8 வயது சிறுமியை கடத்தி, கோவில் கருவறையில் வைத்து 8 நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா மஃப்டி தெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக மத்திய அரசும் இந்த முடிவைக் கையில் எடுத்தது. 12 வயது கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க, பாக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இந்த அவசரச் சட்ட வரைவு திட்டத்தை ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது. மேலும், சில மாதங்களில், கூட இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்தச் சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்படும்.