ஒடிசாவில் உள்ள ஜகன்னாதர் கோவிலுக்குள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழைய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் 3 மாதங்களுக்கு பிறகு விசாரணையை துவக்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜகன்னாதர் கோவிலுக்கு உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவரது மனைவி சவீதாவும் சென்றனர்.இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக பூரி கோயிலுக்குச் சென்றார். கோவில் கருவறை அருகே ராம்நாத் கோவிந்தும், சவீதாவும் சென்றபோது அங்கு பாதுகாவல் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
நாட்டின் முதல் குடிமகளான சுவீதாவை, பாதுகாவலர் ஒருவர் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கோவில் பாதுகாவலர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து புரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அகர்வாலுக்கு குடியரசு தலைவர் மாளிகை புகார் கடிதம் எழுதியது. மூன்று மாதங்களுக்கு பின், இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் நேற்று முதல் விசாரணையை துவக்கி உள்ளார். கோயில் நிர்வாகம், குறிப்பிட்ட பாதுகாவலர்கள் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனுக்கு நேர்ந்த இந்த அவமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறான சம்பவம் முதல்முறையல்ல என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மகாத்மா காந்தி உள்ளிட்டோரும் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.