Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி முறிவால் ஆட்சி கலைந்தது. இதனால் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்குக் குடியரசு தலைவர் ஒப்புதல்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வந்த பிடிபி கட்சியுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. பிடிபி கட்சியை சேர்ந்த மெஹபூபா முஃப்தி ஆட்சி செய்து வந்தார். ஆனால் காஷ்மீரில் நடக்கும் ஆட்சி அதிருப்தியை அளித்துள்ளதாகக் காரணம் கூறி பிடிபி-க்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக. காஷ்மீரில் நிலவி வரும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் அமைதியற்ற சூழல் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பிடிபி நடத்திய ஆட்சி அதிருப்தி அளித்துள்ளதாகவும் காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்தார். எனவே பிடிபி-க்கு இத்தனை காலம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் இரு கூட்டணியின் முறிவினால், மெஹபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை தொடர்ந்து ஆளுநர் ஆட்சி அமைக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது. கூட்டணி பிளவுக்கு பிறகு நேஷ்னல் கான்ஃபெரன்ஸ் ஒமர் அப்துல்லா ஆளுநரை சந்தித்து பேசினார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு நாடு ஆளுநர் ஆட்சி கையில் செல்வது நல்லதல்ல. அது நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னடைவு. காஷ்மீர் நிலை வருத்தம் அளிக்கிறது. எனவே காஷ்மீர் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமைய வேண்டும்.” எனக் கூறினார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் வொஹ்ரா ஆட்சி அமையக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.