ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை இல்லை: ‘கருணை கொலை செய்யுங்கள்’- அற்புதம்மாள் கண்ணீர்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இதனால் ஏழு பேரையும் விடுதலை செய்யும் காலம் கனிந்துவிட்டதாக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். ஏழு பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் மறுத்தது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், ‘இதில் திடீரென குடியரசு தலைவரின் தலையீடு ஏன் வந்தது எனத் தெரியவில்லை. என் மகன் துடித்து துடித்து வாழ்ந்தது போதும். ஒரேயடியாக அவனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்’ என கண்ணீர் வடித்தபடி கூறினார்.

×Close
×Close