நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையைக் குறிப்பிட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 29) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2021ம் ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
அப்போது அவர், கடந்த ஆண்டு கோவிட் -19 தொற்றுநோய், வெள்ளம், நிலநடுக்கம், பெரும் புயல்கள், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை சமாளிக்க நாடு எவ்வாறு ஒன்றிணைந்தது என்பதை எடுத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “நம் நாட்டு மக்களின் இணையற்ற தைரியம், சகிப்புத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை இந்தியா கண்டது” என்று கூறினார்.
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைகள் குறித்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்று கூறினார். மேலும், அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. அதே அரசியலமைப்பு சட்டம்தான் சட்டம் ஒழுங்கை சமமாக தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.” என்று கூறினார். வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் முடிவை தனது அரசாங்கம் மதிக்கிறது என்றும் அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறினார்.
பட்ஜெட் அமர்வுக்கு முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையை 18 எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் அனைவரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் உரை நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்தனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை திருத்தம் செய்து ராமர் கோயில் கட்டுவதைக் குறிப்பிட்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு காலத்தில் கடினமாக கருதப்பட்ட பல பணிகளை நாடு செய்துள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராம்நாத் கோவிந்த், “நாட்டின் உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது. உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது… உலகிலேயே மிகப்பெரிய பிரச்சாரமாக விளங்கும் வந்தே பாரத் மிஷன் பாராட்டப்படுகிறது. இந்தியா உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட 50 லட்சம் இந்தியர்களையும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களையும் தங்கள் நாடுகளுக்கு அழைத்து வந்துள்ளது.
ஜூன், 2020-இல், 20 இந்திய வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக கால்வன் பள்ளத்தாக்கில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஒவ்வொரு நாட்டு மக்களும் படையினருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் எனது அரசாங்கம் முழுக்க முழுக்க உறுதியுடன் உள்ளது. விழிப்புடன் உள்ளது. சரியான கட்டுப்பாட்டு கோடு மீதான இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க கூடுதல் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை குறித்து பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அவமதித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நமக்கு கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது. அதே அரசியலமைப்புச் சட்டம்தான் சட்டம் ஒழுங்கை சமகாக தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கிறது” என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய ராம்நாத் கோவிந்த், “மூன்று புதிய விவசாய சட்டங்களை உருவாக்குவதற்கு முன்பு, பழைய முறையின் கீழ் இருந்த உரிமைகள் மற்றும் வசதிகளில் எந்தக் குறைப்பும் இல்லை என்பதை எனது அரசாங்கம் தெளிவுபடுத்த விரும்புகிறது. மாறாக, இந்த விவசாய சீர்திருத்தங்கள் மூலம் , அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய உரிமைகளை வழங்கியுள்ளது.” என்று கூறினார்.