நாட்டின் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளதாவது, ஒரு சுதந்திர தேசமாக 72 ஆண்டுகளை கடந்துவிட்டோம். தற்போது 73வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்தநேரத்தில், நாட்டின் விடுதலைக்காக, தனது இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். இன்னும் சில நாட்களில், (அக்டோபர் 2) நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். நாம் என்றும் காந்தியின் அகிம்சை வழியிலேயே பயணிக்கின்றோம்.
சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அவரது கோட்பாடுகள், எல்லா மதத்தினரும் பின்பற்றும் வகையில் பொதுவானதாக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், அப்பகுதி மக்களின் வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால், நாட்டின் பிறபகுதி மக்களைப்போலவே, ஜம்மு காஷ்மீர் மக்களும் சமஉரிமை மற்றும் சலுகைகளை பெறுவார்கள். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதன் மூலம், காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை மற்றும் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதொரு நிகழ்வு ஆகும்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு, பல அடிப்படை வசதிகளை வழங்கிவருகிறது. வாழு வாழவிடு என்ற கொள்கையை, இந்திய சமூகம் பின்பற்றி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இவ்வாறு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.