ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் இச்சட்ட முன்வடிவத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 05, 2019 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். இச்சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-ஏ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டசபை கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் ஒன்றிய பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.
ஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதைதொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலங்களவையில் ஆகஸ்ட் 05ம் தேதி நிறைவேறியது.
மக்களவையில் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதா (ஆக., 6) தாக்கல் செய்யப்பட்டது. 370 பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் மசோதாவை ரத்து செய்வதற்கு, ஆதரவாக 351 ஓட்டுகளும், எதிராக 72 ஓட்டுகளும் பதிவானது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 361 ஓட்டுகளும், எதிராக 66 ஓட்டுகளும் பதிவானது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
144 தடை உத்தரவு நீக்கம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அமைதியாக தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நகராட்சி பகுதிகளில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாகவும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை ( 10ம் தேதி) செயல்பட துவங்கும் என்று ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:President ramnath kovind jammu and kashmir act