17-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த ஜூன்.17ம் தேதி கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மக்களவை சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அதன் முக்கிய அம்சங்கள் இங்கே,
மத்திய அரசின் "புதிய இந்தியா" அம்சத்தை முன்வைத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "2024ல் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலராக கொண்டுச் செல்ல திட்டமிட்டிருக்கிறது. எனது அரசாங்கம், வலிமையான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக முன்னெடுத்து சென்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.
2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், அனைவருக்கும் மின்சாரம் வழங்குதலை உறுதிப்படுத்துதல் மற்றும் பெண்களுக்கான உரிமையை உறுதிப்படுத்துதல் போன்றவை அரசின் திட்டங்களாக உள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீதான பாலகோட் வான் வழித் தாக்குதல்கள் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருப்பதே, உலகம் இதனை கவனித்துக் கொண்டிருப்பதற்கான சான்று.
சந்திரயான்-2-ஐ உருவாக்குவதில் நமது விஞ்ஞானிகள் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர். நிலவில் கால் பதிக்கப் போகும் இந்தியாவின் முதல் விண்கலமாகும். அதேபோல், 2022ல் 'ககன்யான' மூலம், விண்வெளிக்கு முதன் முதலாக இந்தியரை அனுப்பவிருக்கிறது இந்தியா. 'மிஷன் சக்தி'யின் வெற்றி மூலம், விண்வெளித்துறையில் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தகுதி வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.
மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது. விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும். சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
நம் வருங்கால தலைமுறைக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும். ஊழலை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 26 லட்ச ஏழை நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
புதிய நிறுவனங்கள் தொடங்குவதில், இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. புதிய நிறுவங்களை தொடங்குவதற்கான சூழியலை எளிதாக்க, சட்டதிட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில், இந்தியாவில் 50,000 புதிய நிறுவங்கள் தொடங்க வேண்டும் என்பதே நமது இலக்காகும். பிரதான் மந்திரி முத்ரா யோஜ்னா திட்டத்தின் கீழ், தனியாக தொழில் செய்பவர்களுக்கு என 19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை விரிவுப்படுத்தி, 30 கோடி மக்கள் பயனடைய வழிவகை செய்யப்படுகிறது. தொழில் முனைவோருக்கு எந்தவித உத்தரவாதமும் இன்றி, ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது." என்று உரையாற்றினார்.