பாரதிய ஜனதாக் கட்சிக்கு நிதி திரட்டும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி இறங்கியிருக்கிறார். மொபைல் ஆப் மூலமாக அவரது வேண்டுகோள் வெளியாகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது பா.ஜ.க.! கட்சி நிதி கேட்டு வீடு வீடாக ஆம் ஆத்மி கட்சியினர் செல்லத் துவங்கியுள்ள நிலையில், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமாக கட்சிக்கு நிதியளித்திடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பங்காக 1000 ரூபாயை நேற்று கட்சி நிதிக்கு அளித்த பிரதமர் மோடி, இவ்வாறு நிதிபெறுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஐந்து ரூபாயோ, 1000 ரூபாயோ உங்களால் முடிந்த தொகையை நரேந்திர மோடி ஆப் மூலமாக கட்சிக்கு நிதியளித்திடுங்கள். இதனால் நாட்டுக்கு சேவையளித்திடும் பணியை கட்சியால் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்!" என கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் தங்கள் பங்காக நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமாக கட்சிக்கு நிதியளித்தனர்.
கடந்த 2015-16 வருவாய் கணக்கில் 76.85 கோடி ரூபாயை கட்சி நிதியாக பெற்ற பா.ஜ.க., அடுத்த ஆண்டே 593 சதவிகிதம் அதிகரித்து, 2016-17 வருவாய் கணக்கில் 532.27 கோடி ரூபாய் கட்சி நிதி பெற்றது பலரது புருவத்தையும் உயரச் செய்தது.
ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2016-17 வருவாய் கணக்கில், தேசிய கட்சிகள் 487.36 கோடி ரூபாய் கட்சி நிதியாக வசூல் செய்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 478 சதம் அதிகம். இதில், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதியளித்தவர்கள் பா.ஜ.க.வில் தான் அதிகம் உள்ளதாக இவ்வமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.
20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதிபெற்ற வகையில், 2,123 கொடையாளர்களிடமிருந்து 589.38 கோடி ரூபாயை கட்சி நிதியாக பா.ஜ.க. பெற்றுள்ளது. காங்கிரஸ் தரப்பில், 599 கொடையாளர்களிடமிருந்து 41.90 கோடி ரூபாய் கட்சி நிதியை வசூல் செய்யப்பட்டுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், தற்போது மீண்டும் வசூல் சாதனை படைக்க கோதாவில் குதித்துள்ளது பா.ஜ.க.