2022-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் நிச்சயம் வீடு கட்டித் தரப்படும் என லக்னோவில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, நகர்ப்புற மேம்பாட்டுக்கான அடல் மிஷன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூன்றாவது ஆண்டு விழா லக்னோவில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, முந்தைய அரசுகளின் தவறான திட்டங்களால் நகரங்கள் கான்கீரிட் காடுகளாகிவிட்டன என்றார். 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, முதல் கட்டமாக 54 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
லக்னோ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றும் வகையில், புதிதாக கட்டப்படும் வீடுகள் பெண்கள் பெயரிலேயே பதிவு செய்யப்படும் எனவும் மோடி தெரிவித்தார். முன்னதாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள 35 பெண்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.