PM Modi to Launch Largest Healthcare Scheme 'Ayushman Bharat' Today: ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவக்கி வைக்கிறார். அரசாங்கத்தால் குடிமக்களுக்கு வழங்கப்படும் உலகின் பெரிய மருத்துவ திட்டம் இது!
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன? இதற்கு மத்திய அரசு கொடுக்கும் விளக்கம் இங்கே: ஓர் ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் வரை ஆகும் மருத்துவ செலவை அரசாங்கவே ஏற்றுக்கொள்ளும். இதனால் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நாட்டில் எங்கு வேண்டுமானாலும், அரசாங்க மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளர்கள் சிகிச்சை பெற முடியும். இந்தியாவின் ஏழை குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நல்ல தரமான, சுகாதார வசதியை மலிவான விலையில் பெற முடியும்.
இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைத்து கொள்ளும் படி அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவை!
தெலுங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
சுமார் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டமானது, உலகிலேயே மருத்துவ பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் துவங்கப்படும் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷாய்பஷா மற்றும் கோடெர்மா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சிக்கிம் மாநிலத்தில் பாங்யாங் விமானநிலையத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சிகளையொட்டி அந்தந்த பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.