பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக பதவி வகித்து வந்த பிபேக் தெப்ராய், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bibek Debroy, renowned economist and chairman of PM’s economic advisory council, passes away
69 வயது நிரம்பிய பிபேக் தெப்ராய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடல் அடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதயத்தில் அடைப்பு உள்ளிட்ட நோய்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
தெப்ராய் தலை சிறந்த அறிஞர் எனவும், பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், அரசியல் மற்றும் ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளில் அவர் ஆளுமை பெற்றிருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவு சார்ந்த துறையில் நீங்கா இடத்தை தெப்ராய் விட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பழங்கால நூல்களை இளம் தலைமுறையினர் எளிதில் கையாளக் கூடிய பணியை செய்வதில் தெப்ராய் ஆர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தெப்ராயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிபேக் தெப்ராய், மகாபாரதம் முழுவதையும் ஆங்கிலத்தில் 10 தொகுதிகளாக மொழிப்பெயர்ப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“