தேசத் துரோக வழக்கில் சிறை சென்ற பிரதமர் உதவித்தொகை பெற்ற காஷ்மீர் மாணவர்; வாழ்கையை திரும்பப் பெற போராட்டம்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, தேசத் துரோக வழக்கில் சிறை சென்ற பிரதமர் உதவித்தொகை பெற்ற காஷ்மீர் மாணவர் ஹரிஸ் மன்சூர், ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு, தனது வாழ்கையை மீண்டும் திரும்பப் பெற போராடிவருகிறார்.

By: Updated: December 2, 2019, 09:47:12 PM

ரித்திகா சோப்ரா
பிப்ரவரி 14, 2019, ஹரிஸ் மன்சூரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அந்த நாளிலிருந்து ஒன்பது மாதங்களில், மன்சூர் ஒரு மாற்றமடைந்த மனிதராகிவிட்டார். அவர் மத நம்பிக்கையுடையவராக உள்ளார். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகிறார். அவர் அரிதாகவே தனது வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மேலும், இந்த இருபது வயது இளைஞர் வழக்கத்திற்கு மாறாக எந்த சமூக வலைதளங்களிலும் ஈடுபடுவது இல்லை.

“என்ன நடந்தாலும் சமாளிக்கும் பொறுமையை எனது சமய நம்பிக்கை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது” என்று குப்வாரா மாவட்டத்தில் உள்ள தஹாமா கிராமத்தைச் சேர்ந்தவரும் பெங்களூருவில் உள்ள காஷ்மீரி நர்சிங் மாணவரும், பிரதமரின் சிறப்பு உதவித்தொகை திட்டத்தை பெறுபவருமான மன்சூர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 16 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மன்சூர் தனது நண்பர்களான கோஹர் முஷ்டாக் மற்றும் ஜாகிர் மக்பூல் ஆகியோருடன் சேர்த்து தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவின் மத்திய சிறையில் ஏழு மாதங்களைக் கழித்த பின்னர், மன்சூர் செப்டம்பர் 20 ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, அவரது வாழ்க்கையை திரும்பப் பெற போராடி வருகிறார்.

அவர் ஸ்பூர்த்தி நர்சிங் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது பிரதமரின் உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. தனது உதவித்தொகையை மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவதற்கும் தனது இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு கல்லூரியிடம் மன்றாடுவதற்கும் ஒரு காவல் நிலையத்தில் வருகையை குறிப்பிடுவதற்கும் இடையே, மன்சூர் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொண்டு, அவர் தேசத்துரோக குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க போராடி வருகிறார்.

“நாங்கள் போலீசில் புகார் அளித்தபோது, இது தேசத்துரோக வழக்கு என்று எங்களுக்குத் தெரியாது” என்று ஸ்பூர்த்தி நர்சிங் கல்லூரியின் முதல்வர் பாபு தர்மராஜா கூறினார். மன்சூர் பி.எஸ்சி நர்சிங்கில் இரண்டாம் ஆண்டில் படித்து வந்தார். முஷ்டாக் (22) கைது செய்யப்பட்ட நேரத்தில் நர்சிங்கில் பொது பட்டம் பெற்றார். மக்பூல் (24) சினாய் நர்சிங் கல்லூரி மாணவர்.

“அவர்களின் (மன்சூர் மற்றும் முஷ்டாக்) கல்வி செயல்திறன் நன்றாக இருந்தது. அதேபோல் அவர்களின் நடத்தையும் இருந்தது. சம்பவம் நடந்த நாள் வரை அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை” என்று முதல்வர் கூறினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே பிப்ரவரி 14 மாலை தர்மராஜா குறிப்பிடும் சம்பவம் நடந்தது.

மன்சூர், மக்பூல் மற்றும் முஷ்டாக் ஆகியோருடன் ஒரு வாக்குவாதத்திற்கு வழிவகுத்த இந்த தாக்குதலுக்கு பழிவாங்கக் கோரி கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் பேஸ்புக்கில் சில செய்திகளை வெளியிட்டார்.

அடுத்த நாள் கல்லூரியில் ஒரு குழப்பம் வெடித்து மாணவர்களிடையே சச்சரவு ஏற்பட்டது. பிப்ரவரி 16 ஆம் தேதி மூன்று மாணவர்களும், தேவ்நாத்தும் முதல்வரின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். “அதுவரை, இது மாணவர்களிடையேயான ஒரு சண்டை மட்டுமே. கல்லூரி வளாகத்தில் காவல்துறையினரை அழைத்தபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்” என்கிறார் மன்சூர்.

சில மணி நேரங்களுக்குள், மன்சூர் மற்றும் அவரது நண்பர்கள் முஷ்டாக் மற்றும் மக்பூல் ஆகியோருக்கு எதிராக நமது இந்திய இராணுவத்தை தவறாக செய்திகளை அனுப்புதல் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை சீர்குலைத்ததற்காக பொருத்தமான சட்ட நடவடிக்கை கோரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.

காவல்துறையை அழைப்பதற்கான நிர்வாகத்தின் முடிவை நியாயப்படுத்தும் தர்மராஜா, “எங்கள் கல்லூரிக்கு வெளியே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று கூறினார். “எங்கள் கல்லூரியின் காஷ்மீர் மாணவர்கள் இந்த தாக்குதலைக் கொண்டாடுவதாக வதந்திகள் வந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்தவும், எங்கள் மற்ற (காஷ்மீர்) மாணவர்களைப் பாதுகாக்கவும் நாங்கள் காவல்துறையை அழைக்க வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

இது நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்

பெங்களூருவில் உள்ள தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மன்சூர், எனது விவரங்களுடன் ஒரு ஸ்லேட்டை வைத்திருந்தபோது காவல்துறை அதிகாரிகள் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தருணம்தான் இன்னும் நினைவில் இருப்பதாக கூறினார். “நான் அதை திரைப்படங்களில் மட்டுமே பார்த்துள்ளேன். எனக்கு என்ன நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறினார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், நாடு முழுவதும் உள்ள பல காஷ்மீர் மாணவர்கள் தங்கள் கல்லூரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிலர் சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துக்களுக்காக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.

அவர் கல்லூரி வேலை நேரத்தில் கைது செய்யப்பட்டதால், பெங்களூரு மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது மன்சூர் தனது சீருடையில் இருந்தை நினைவு கூர்ந்தார். “இதுபோன்ற ஒரு விஷயம் அவர்களுக்கு நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள். முதல் சில நாட்களில் நாங்கள் சிறையில் அடக்க முடியாமல் அழுதோம்” என்று அவர் கூறுகிறார்.

“நாங்கள் குற்றம் சாட்டப்பட்டதைக் தெரிந்துகொண்டவுடன் பிரச்சினையின் முக்கிய தன்மை மூழ்கியது. ஒரு வாரம் கழித்து எனது சகோதரர் எங்களை சிறையில் சந்தித்தபோது தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பற்றி நாங்கள் தெரிந்துகொண்டோம்”என்றார்.

மன்சூரின் கூற்றுப்படி, அந்த மூன்று பேரும் உதவிக்காக தங்கள் சமய நம்பிக்கையின் பக்கம் நோக்கி திரும்பினர். “சிறை அதிகாரிகள் எங்களுடன் நல்லமுறையில் இருந்தனர். சக கைதிகள் எங்களுக்கு படிக்க புத்தகங்களை கொடுத்தார்கள். நாங்கள் குர்ஆன் மற்றும் சாஹிஹ் அல் புகாரி ஆகியவற்றைப் படித்தோம். நாங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழ ஆரம்பித்தோம். அது எங்களுக்கு பொறுமை பெறவும், ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கவும் உதவியது” என்று அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில் அவர்களது முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், செப்டம்பர் 20 ம் தேதி நீதிமன்றம் அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்டது. “நண்பர்களுக்கிடையில் பேஸ்புக் உரையாடலைத் தவிர, குற்றம் சாட்டப்பட்ட எண் 1 முதல் 3 வரை வேறு எந்த கடுமையான குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கிறார்கள் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட மூன்றுபேரின் எதிர்கால நலனுக்காக, அவர்கள் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் வெளியிட தகுதியுடையவர்கள் என்று நான் கருதுகிறேன்” என்று கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டஜாமின் உத்தரவு கூறுகிறது.

ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் தனிநபர் பத்திரமும், தலா ரூ.25 ஆயிரம் ரொக்க ஜாமீனும் வழங்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது. தவிர, அவர்கள் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேற முடியாது; ஒவ்வொரு மாதமும் ஒரு காவல் நிலையத்தில் வருகையை கட்டாயமாகக் குறிக்க வேண்டும்; மற்றும் அனைத்து நீதிமன்ற விசாரணைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த விசாரணை திங்கள்கிழமை நடைபெறுகிறது.

‘நான் திடீரென வளர்ந்ததைப் போல உணர்கிறேன்’

அவரது வழக்கு முடியும் வரை அவர் மீண்டும் காஷ்மீருக்கு செல்ல முடியாது என்பதால், குப்வாராவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரான மன்சூரின் தந்தை தனது வாழ்க்கைச் செலவுகளைச் ஏற்று வருகிறார். மக்பூல் மற்றும் முஷ்டாக் ஆகியோருடன் சேர்ந்து பெங்களூருவில் உள்ள அவர்களது குடியிருப்பில் அதிக நேரத்தை செலவிடுகிறார்.

“நாங்கள் ஏழு மாதங்கள் சிறைச்சாலையில் ஒன்றாக வாழ்ந்தோம். வெளியேற வேண்டிய அவசியத்தை நாங்கள் இனி உணரவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல உறவை வைத்துள்ளோம்” என்று மன்சூர் கூறினார். அவர்கள் வெளியில் சென்றால் தாக்கப்படுவார்கள் என்று அஞ்சுவதால் அவர்கள் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள். முஷ்டாக் மற்றும் மக்பூல் இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

தனது இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி மன்சூர் விடுதலையானதிலிருந்து நான்கு முறை தனது கல்லூரியை அணுகியுள்ளார். “எனது தற்செயலான குறும்பு நடவடிக்கைக்கு நான் வெட்கப்படுகிறேன் … இந்த சம்பவம் எனது குடும்பத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எனது மனந்திரும்புதலை எனது படிப்பை மீண்டும் தொடங்க உதவுவதன் மூலம் இதை எனது வாழ்க்கையை நோக்கிய ஒரு சாதகமான படியாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் நவம்பர் 7 ஆம் தேதி கல்லூரி பதிவாளருக்கு எழுதிய மின்னஞ்சல் கூறுகிறது.

“அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் இருந்ததால் நாங்கள் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ராஜீவ் காந்தி சுகாதார சேவைகள் பல்கலைக்கழகத்திற்கு (இணை பல்கலைக்கழகம்) அனுப்பியுள்ளோம். அவர்களை திரும்ப அழைத்துச் செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனுமதி தேவை” என்று கல்லூரி முதல்வர் தர்மராஜா கூறினார்.

ஸ்பூர்த்தி நர்சிங் கல்லூரி இப்போது மாணவர்களிடம் “எந்தவிதமான விரும்பத்தகாத / ஒழுக்கமற்ற / சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடக இடுகைகளில் ஈடுபடுவதற்கு முழு பொறுப்பு” என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் அவர்கள் தங்கள் கல்லூரியிலிருந்து எந்த ஆதரவையும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கல்லூரியில் தற்போது 19 காஷ்மீர் மாணவர்கள் உள்ளனர். நடப்பு கல்வியாண்டில் புதிய காஷ்மீர் மாணவர்கள் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

மன்சூரின் உதவித்தொகை குறித்து கேட்டதற்கு, ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறுகையில், “நான் இதை சரிபார்த்து கண்டுபிடித்து அறிவிப்பேன். ஆனால், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தால், இதை நாங்கள் கல்லூரிக்கு எடுத்துச்சென்று மாணவருக்கு உதவ முயற்சிப்போம். அதே கல்லூரியில் அல்லது வேறு இடத்தில் அளிப்போம்” என்று கூறினார்.

பிப்ரவரி 14 நிகழ்வுகள் அவரை எவ்வாறு மாற்றின என்று கேட்டதற்கு, மன்சூர் கூறுகையில், “எனக்கு என்ன நடந்தது என்று யோசிக்க முயற்சிக்கிறேன். ஆனால், ஆம், நான் மாறிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் திமிர்பிடித்தவனாக இருந்தேன். ஆனால் இப்போது நான் ஒரு மேலான சக்தியை நம்புகிறேன். சர்வவல்லவருடன் நெருக்கமாக உணர்கிறேன். நான் திடீரென்று வளர்ந்ததைப் போல உணர்கிறேன்… இப்போது எனது முக்கிய கவனம் எனது பட்டப்படிப்பை முடித்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதுதான்” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Prime ministers scholarship for kashmir student who went to jail for sedition after pulwama struggling to get back to life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X