புதுச்சேரி மக்களால் செல்லாது என கருதப்படும் 10 ரூபாய் நாணயத்துக்கு தனியார் நிறுவனம் முட்டையுடன் பிரியாணி வழங்கியதால், அதை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் 10 ரூபாய் நாணயம் கடைகளில், வணிக நிறுவனங்களில் வாங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் செல்லாத நாணயமாக புதுச்சேரி மக்களால் 10 ரூபாய் நாணயம் கருதப்பட்டது. எனவே தமிழகத்திற்கு செல்லும் புதுச்சேரி மக்கள் அங்குள்ள வணிக நிறுவனங்கள் வழங்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும் அங்கேயே அதை செலவழித்துவிட்டு புதுச்சேரிக்கு வரும் நிலையே நீடிக்கிறது. 10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி நிர்வாகம் முறைப்படி அறிவித்து எச்சரித்தும் புதுச்சேரியில் இவை பெருமளவில் பயன்பாட்டில் இல்லை.
இதனிடையே புதுச்சேரி மக்களால் வாங்க மறுக்கப்படும் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை வலியுறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர பகுதியிலுள்ள ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகம் சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அதாவது காணும் பொங்கலன்று 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இதன் காரணமாக புஸ்சி வீதி, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகிலுள்ள அந்த ஓட்டல் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அங்கு கூட்ட நெரிசல் அதிகமாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார், ஓட்டலுக்கு 10 ரூபாய் நாணயத்துடன் வந்தவர்களை வரிசையில் நிற்குமாறு கூறினர். இதனால் 1 கிமீ தூரத்துக்கு பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர். 12 மணிக்கு ஓட்டல் நிர்வாகம் ஒருநபரிடம் ஒரு 10 ரூபாய் நாணயத்தை மட்டும் பெற்றுக் கொண்டு ஒரு பிரியாணி பொட்டலத்தை வழங்கியது.
இவ்வாறாக 500 பேருக்கு அரை மணி நேரத்தில் பிரியாணி பொட்டலத்தை வழங்கிய நிலையில், சலுகை திட்டத்தை நிறைவு செய்தது. இதன் காரணமாக 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்த மீதமுள்ள மக்கள் ஏமாற்றமடைந்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“