Union Health Minister Mansukh Mandaviya Tamil News: ப்ரீச் கேண்டி, அமிர்தா மருத்துவமனை, மேதாந்தா, ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் சத்ய சாய் உள்ளிட்ட 62 பெரிய தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் சமீபத்தில் சந்திப்பு நடத்தினர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவமனைகளில் 60 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மருத்துவ படிப்புகளை தொடங்க வலியுறுத்தின. மேலும், சுமார் 20 மருத்துவமனைகள் இந்த ஆண்டிலேயே படிப்புகளைத் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மாண்டவியா கூறுகையில், ''முன்பு, நல்ல தனியார் மருத்துவமனைகள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்வம் காட்டவில்லை; மருத்துவமனை அவர்களின் தொழிலாக இருந்தது. ஒவ்வொரு நகரத்திலும் நான்கைந்து மருத்துவமனைகள் உள்ளன. இப்போது, படிப்புகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அதிகாரி ஒருவர், “மருத்துவமனைகளில் கிடைக்கும் சிறப்புச் சேவைகள் மூலம், பெரும்பாலானவர்கள் முதுகலை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்குவார்கள். ஆனால் சிலர் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) படிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள், ”என்று கூறினார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சில மருத்துவமனைகள் நிலம் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகள் தொடர்பான அதிகப்படியான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளால் தயக்கம் காட்டுவதாகவும், பல மருத்துவமனைகள் ஏற்கனவே தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்றும், ஆய்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நடப்பு கல்வியாண்டில் இருந்து மாணவர்களை எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
"நிச்சயமாக, நகரத்தின் நடுவில் ஏராளமான நிலம் இருக்க முடியாது, அது ஒரு தடையாக இருக்கிறது " என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, உச்ச மருத்துவக் கல்விக் கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதில் முந்தைய அனுபவம் உள்ள மருத்துவமனை சங்கிலிகளை மருத்துவமனைகள் நிறுவப்படும் வரை காத்திருக்காமல் வேறு இடங்களில் திறக்க அனுமதித்தது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன், இரண்டு ஆண்டுகள் செயல்பட்டால் மட்டுமே மருத்துவக் கல்லூரியை நிறுவ முடியும். 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை நாட்டில் வேறு இடங்களில் நடத்துவதில் அனுபவம் இருந்தால், வரைவு முன்மொழிவு இரண்டு வருட காத்திருப்பு கால விதிமுறையை நீக்குகிறது.
இதுபோன்ற தளர்வுகளால் சமீபத்தில் ஃபரிதாபாத்தில் அமிர்தா மருத்துவமனை நிறுவப்பட்டது. ஏற்கனவே கொச்சியில் நன்கு நிறுவப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருவதால், அது உடனடியாக படிப்புகளைத் தொடங்க அனுமதிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) படிப்பு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது சுமார் 1 லட்சம் இளங்கலை இடங்களும், 42,000 க்கும் மேற்பட்ட முதுகலை இடங்களும் உள்ளன.
விதிமுறைகளை தளர்த்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்க வாய்ப்பில்லை என்றும், சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் ஏஐ மூலம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை நடைமுறைப்படுத்த மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோயாளிகள் மற்றும் ஆசிரியர்களை கண்காணிக்க முடியும். என்எம்சி ஏற்கனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் 25 சிசிடிவி கேமராக்களை முக்கிய இடங்களில் நிறுவவும், பயோமெட்ரிக் வருகை முறையைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இதுபோன்று நிறுவப்படும் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனை சோதனையின் போது மட்டுமே தேவையான எண்ணிக்கையில் நோயாளிகள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து வருவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.