புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களை கட்டாயப்படுத்தி இடமாறுதல் சாண்றிதழ் வழங்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கல்விதுறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைய கூடாது என்பதற்காக புதுவையில் சில தனியார் பள்ளிகள் சுமாராக படிக்கும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி பள்ளியில் இருந்து நீக்குகின்றன.
இது பெற்றோர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து காட்ட தனியார் பள்ளிகள் சில சுமாராக படிக்கும் மாணவர்களை தனிப் பிரிவாக்குகின்றனர்.
தொடர்ந்து பெற்றோரை அழைத்து பேசுகின்றனர்.
அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் தனித் தேர்வர்களாக எழுத வேண்டும் என கட்டாயப் படுத்துகின்றனர். இதற்கும் சில பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்கின்றனர்.
இன்னும் சில மாணவர்களை மீண்டும் 9ம் வகுப்பு, பிளஸ் 1 படிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வற்புறுத்துகின்றன. இவற்றுக்கு
சம்மதிக்காத மாணவர்களுக்கு டிசி எனப்படும் மாற்று சாண்றிதழை அளித்து அனுப்புகின்றனர்.
இதுதொடர்பாக தொடர் புகார்கள் கல்விதுறைக்கு வந்தது. இதனையடுத்து கல்வித்துறை தனியார் பள்ளிகளை எச்சரித்தது.
இந்தநிலையில் பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி தனியார் பள்ளிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவையில் 9, 10, 11 மற்றும் பிளஸ் 2.ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெற சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவது பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
எனவே, அனைத்து தனியார் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்க கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் இடமாறுதல் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.இதனை தனியார் பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"