உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டு உ.பி.யில் நடைபெற சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், " உபி.,யில் காங்கிரஸ் கட்சி 40 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. அரசியலில் பெண்களின் ஈடுபாடு முழுமையாக இருக்கும் என உறுதிமொழி அளிக்கிறேன். முதலில் 50 விழுக்காடு அளிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். பின்னர், மற்ற மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து 40 விழுக்காடு வழங்க முடிவு செய்தோம். உ.பியில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. எனவே, அதில் 160 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்" என்றார்.
அப்போது அவரிடம், இந்த அறிவிப்பால் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மனைவிகளையோ அல்லது குடும்பத்தின் மற்ற பெண்களையோ களமிறக்க வழிவகுக்குமே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதில் எந்த தவறும் இல்லை. இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல். எவ்வாறாயினும், தேர்வு முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தான் நடத்தப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது. பெண்கள் வருகையால் சாதி மற்றும் மத அரசியல் என்பதை வளர்ச்சி அரசியலாக மாற்றிட முடியும்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil