மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை வாழ்த்தும் வீடியோ, ஊடகங்களில் பரபரப்பான விவாதப்பொருளாக மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச கிழக்கு தொகுதியின் பொறுப்பாளராகவும் உள்ளார். காங்கிரஸ் தலைவரும் தனது சகோதரருமான ராகுல் காந்திக்காக, உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் உள்ளிட்ட பல தொகுதிகளில், வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, பிரியங்கா காந்தி தற்போது அங்கே முகாமிட்டுள்ளார். இந்தூரில் நடைபெற்ற வாகன பேரணியில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.
அப்போது பிரியங்கா காந்தி கார் சென்ற கான்வாயில், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மோடி வாழ்க...மோடி வாழ்க என கோஷம் எழுப்பினர். அவர்களை கடந்துசென்ற கார் திடீரென்று நின்றது. அதில் இருந்து இறங்கிய பிரியங்கா, பா.ஜ. தொண்டர்களிடையே வந்து அவர்களுக்கு வாழ்த்துதெரிவித்ததோடு மட்டுமல்லாது. நீங்கள் உங்களுக்கேற்ற சரியான இடத்தில் இருப்பது போல, நானும் இருக்கிறேன் என்று கூறிச்சென்றார். பா.ஜ., தொண்டர்களும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்து கூறினர்.
கடந்த 30 ஆண்டுகளாக லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனே, இந்தூர் தொகுதியின் எம்.பி.,யாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகளாக (1989 முதல்) பாரதிய ஜனதா கட்சியின் வசமுள்ள மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் தொகுதியை, காங்கிரஸ் கட்சி, இப்போவாவது மீட்குமா என்பது வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலின் முடிவுகளில் தான் தெரியவரும்.