குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் முன்பு அடையாள தர்ணா நடைபெற்றது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சர்வாதிகாரமாக மாறிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள் என்றும் கூறினார்.
டெல்லி இந்தியா கேட்டில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டபோது, “மாணவர்கள் இந்த தேசத்தின் ஆன்மா. இந்த சம்பவம் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எதேச்சதிகார நாடல்ல. அனைவரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். மாணவர்கள் குரல் எழுப்ப உரிமை உண்டு. இந்த நாடு அவர்களுடையது. பெண்கள் மீதான தாக்குதல், பொருளாதாரம், வேலையின்மை மற்றும் மாணவர்களுக்கு எதிராக நேற்று நடந்தது பற்றி பிரதமர் மோடி ஏன் மௌனமாக இருக்கிறார்.” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக திங்கள்கிழமை காலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் பேரணியில் கலந்துகொண்டார், அப்போது, என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) திரும்பப் பெறும்வரை தனது போராட்டங்கள் தொடரும் என்று கூறினார். அங்கே கூடியிருந்த கூடியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சத்தியம் செய்த மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் என்.ஆர்.சி மற்றும் குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.
மேலும், “ஏன் இங்கே பிரிவினை ஆட்சி கொள்கை? ஏன் இங்கே வெறுப்பு இருக்கிறது? வெறுப்பு அரசியலுக்கு முன்பு நான் தலைவணங்கப் போவதில்லை. வெறுப்பு அரசியலை நம்பும் மக்கள் வெளியே செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் நாங்கள் இங்கேயே இருப்போம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை துரதிர்ஷ்டவசமானது என்றும் ஆழ்ந்த வேதனைக்குரியது என்றும் டுவிட்டரில் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுமாறு மாணவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் எந்தவொரு ஏற்பாடும் குடியுரிமை திருத்தச் சட்டதில் இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் டி.எம்.சி ஆகியவை உங்களை தவறாக வழிநடத்தி நாடு முழுவதும் வன்முறைச் சூழலை உருவாக்குகின்றன” என்று கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் மாணவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வெளிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நாட்டை வன்முறை புயலுக்குள் தள்ளிவிட்டது; இளைஞர்களின் எதிர்காலத்தை சாம்பலாக்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.