குஜராத்தில் பாஜக வென்ற கோத்ரா தொகுதியில் 2,494 வாக்குகள் அதிகமானது எப்படி என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், கடந்த 18-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 99 இடங்களை பாஜக கைப்பற்றி மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், பாஜக வெற்றிபெற்ற கோத்ரா தொகுதியில், பதிவான வாக்குகளைவிட, ஓட்டு எண்ணிக்கையின்போது 2,494 வாக்குகள் கூடுதலாக வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது, ”குஜராத் மாநிலம் கோத்ரா தொகுதியில் தேர்தல் அன்று மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,417. ஆனால், ஓட்டு எண்ணிக்கையின்போது மொத்தம் 1,78,911 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலின்போது பதிவான வாக்குகளை விட ஓட்டு எண்ணிக்கையின் போது 2,494 வாக்குகள் கூடுதலாக வந்தது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு தினத்தில் பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுத்த ஒப்புகை சீட்டையும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவு பற்றிய விவரத்தையும் டிவிட்டரில் பிரியங்கா இணைத்துள்ளார். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.