Priyanka Gandhi: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலின் கட்டுமான பணிகளுக்கான 10,000 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்கள் டிசம்பரில் வெளியிட்டன. தச்சர்கள், இரும்பு வளைக்கும் தொழிலாளிகள், பீங்கான் டைல்ஸ் ஃபிக்ஸர்கள் மற்றும் மேசன்கள் போன்ற கட்டுமான பணிக்கு மாத சம்பளம் ரூ. 1.37 லட்சம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, இதற்கான ஆள்சேர்க்கும் பணியானது ரோத்தக் மற்றும் லக்னோவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிக்கான நேர்காணலுக்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரிசையில் கால்கடுக்க நின்று வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இஸ்ரேலில் வேலை தேடும் இந்தியர்கள் குறித்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என பிரதமர் மோடி கொடுத்தது 'பொய்யான வாக்குறுதி' என்று கடுமையாக சாடியுள்ள அவர், நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் வலைதள பதிவில், "எங்காவது போர் சூழ்நிலை இருந்தால், முதலில் நாம் நமது குடிமக்களை அங்கிருந்து மீட்டு நமது நாட்டிற்கு கொண்டு வருகிறோம். ஆனால் இன்று வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்குச் சென்று இந்த ஆபத்தை எடுத்துக்கொண்டு ஆதரவற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கூட அந்த நாட்டு அரசாங்கம் காப்பாற்றாத நிலையை உருவாக்கியுள்ளது. தேர்தல்களில், ‘5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’, ‘ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு’, ‘மோடியின் உத்தரவாதம்’ போன்றவை வெறும் வார்த்தைகள் என்பதை இது காட்டுகிறது." என்று கூறியுள்ளார்.
மேலும், "இன்று இந்தியாவின் உண்மையான பிரச்சினை வேலையின்மை-பணவீக்கம் ஆகும். அதற்கு பா.ஜ.க அரசிடம் தீர்வு இல்லை. நாட்டின் இளைஞர்கள் இப்போது இதைப் புரிந்து கொண்டுள்ளனர். இதில் அரசின் பங்கு என்ன? போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு இந்திய இளைஞர்களை பலி கொடுக்க இந்திய அரசு எந்த அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது? இந்த இளைஞர்களின் உயிரையும் உடமையையும் பாதுகாக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்? கடவுளே, யாருக்காவது விபத்து நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு?” என்றும் அந்தப் பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Five trillion dollar economy, Modi’s guarantee a jumla’: Priyanka Gandhi slams Centre over youths queuing up for jobs in Israel
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“