டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் தான் தங்கியுள்ள அரசு இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அந்த இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பியும் அக்கட்சியின் ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார்.
பிரியங்கா காந்தி வாத்ரா கடந்த 23 ஆண்டுகளாக (1997 முதல்) டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அரசு இல்லத்தில தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்திக்கது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியிட்ட உத்தரவில்,"எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட ஒருவருக்கு, அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வீட்டு எண் 35, 6பி இல்லத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டும். தவறுமாயின் ,அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்” என தெரிவித்தது.

தேநீர் விருந்து தொடர்பாக கடிதம், தொலைபேசி வாயிலாக அனில் பலூனியின் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்தியின் இந்த செயல், ஆரோக்கிய அரசியலை உருவாக்குவதாக கூறும் கட்சியினர், காலக்கெடுவிற்குள் நிச்சயமாக இல்லத்தை காலி செய்துவிடுவார் என்றும் தெரிவிக்கின்றனர்.
டெல்லி இல்லத்தை காலி செய்த பிறகு, தற்காலிகமாக, குருகிராமில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பார் என்றும் , அதன்பிறகு மீண்டும் புதுடெல்லியில் குடியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரியங்கா காந்தியின் எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டதையும், இல்லத்தை காலி செய்யுமாறு வந்த உத்தரவை திரும்ப பெறுமாறு காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil