குஜராத் மோர்பியில் தொங்கும் பாலம் இடிந்து விழுந்த விபத்தின் விசாரணையில்,பாலத்தின் கட்டமைப்பை சரியான முறையில் சோதனை செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் அமைந்துள்ளது தொங்கும் பாலம். இந்த நகரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் இப்பாலம் கடந்த ஞாயிற்று கிழமை இடிந்து விழுந்தது. இதில் 135 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவாகாரம் தொடர்பான மோர்பியின் நகராட்சி தலைமை அதிகாரி, சந்தீப்சிங் சாலா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் இந்த பாலம் தொடர்பான ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் சமர்பிக்கப்பட்டது. மேலும் இந்த பாலத்தை கட்டிய நிறுவனம், கட்டமைப்பு தொடர்பான எந்த சோதனையையும் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் எடை தாங்கும் தன்மை மற்றும் ஒட்டுமொத்தமாக அதன் உள்கட்டமைப்பு தொடர்பான பரிசோதனைகள் நிகழ்த்தப்படவில்லை என்று கூறியுள்ளார் நகராட்சி தலைமை அதிகாரி.
இந்த தொங்கும் பாலத்தின் பழுது, பராமரிப்பு, ஓரோவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குழு அஜந்தா பிராண்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த பாலம் பழுதுபார்க்கப்பட சுமார் 7 மாதங்கள் வரை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விபத்து நடைபெறும் நாளில் சுமார் 2000 முதல் 2500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமை என்பதால், அதிக வசூல் நடைபெற்றுள்ளது. சுமார் மாலை 6.30 மணிக்கு விபத்து நடைபெறும்போது, சுமார் 300 பேர் பாலத்தின் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2007ம் ஆண்டு, பாலத்தின் நடைபாதையானது, மரத்திலிருந்து 3 லேயர் ( தடிமன்) அலுமினியம் தட்டுகளாக மாற்றப்பட்டது. சமீபத்தில் இது 4 லேயர் வரை கொண்ட அலுமினியம் தட்டுகளாக மாற்றப்பட இருந்தது என்பது குறிப்பிடதக்கது.