scorecardresearch

அல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம்! – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு!

இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு

அல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம்! – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பசு மாடுகளுடன் வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் இருவரை கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்கள் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கினர். இதில், ரக்பர் கான் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, கும்பலால் தாக்கப்பட்ட இரு இளைஞர்களும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்க போலீஸார் தங்கள் வந்திருந்த வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால், அதற்கு முன்னதாக, தனியாக ஒரு மினிவேனைப் பிடித்து இரு பசுமாடுகளையும், 10 கி.மீ தொலைவில் உள்ள காப்பகத்தில் சேர்த்துவிட்டு போலீஸார் திரும்பியுள்ளனர்.

அதுவரை காயத்துடனும், வலியுடனும் அந்த இளைஞர்கள் புலம்பினார்கள் என்று நேரில் பார்த்த மக்கள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன், பசுமாடுகளைக் கடத்தியது ஏன்? எனக்கேட்டு இருவரையும் போலீஸார் தாக்கி அதன்பின் 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல், வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி போலீஸார் தேநீர் அருந்திவிட்டு, அதன்பின் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரு இளைஞர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், ரக்பர் கான் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.20 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் அதிகாலை 4.30 மணிக்குத்தான், 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் இரு இளைஞர்களையும் அனுமதித்துள்ளனர் என்று முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “அல்வாரில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ரக்பர் கானை 6 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க போலீஸார் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். ரக்பர் கானை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏன் இந்தத் தாமதம்?. போலீஸால் தங்கள் வாகனத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ரக்பர் கானை வைத்துக்கொண்டே ஹோட்டலில் தேநீர் குடித்துள்ளனர். இந்தத் தாமதத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளார். இதுதான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான ‘புதிய இந்தியா’. இந்த புதிய இந்தியாவில், மனிதநேயம் வெறுப்புணர்ச்சியால் அகற்றப்பட்டுவிட்டது. மக்கள் நசுக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அண்மையில் கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், ‘இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும்’ என்று கூறி, ‘யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு, நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கும்.

ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு, இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்த பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Prodded by sc modi govt sets up four member panel to suggest laws against lynching mob violence