500 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மறுப்பு : மத்திய அரசு அறிவிப்பு

சொத்து விபரங்கள் தாக்கல் செய்யாத 500 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்கள் தகவலை சட்டப்படி அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் விளைவாகச் சட்டத்தை பின்பற்றாத போலீஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

1968-ம் ஆண்டின் இந்திய அரசுப் பணிகள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவர்களின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை 515 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யத் தவறிவிட்டனர். மேலும் இந்த ஆண்டு, மொத்தம் உள்ள, 3,905 ஐ.பி.எஸ்., அதிகாரிகளில், 3,390 பேர் மட்டுமே தங்களின் சொத்து விபரங்களை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது 515 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒத்து விவரம் தாக்கல் செய்யவில்லை என்ற தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய அரசிடம் தெரிவித்தது. மேலும் தாக்கல் செய்யாததின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலட்சியம் காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறிய செய்தி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close