மக்களை உளவுப்பார்க்க பெகாசஸ் செயலி பயன்படுத்திய விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த குழு முன் ஆஜரான இரண்டு சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், மனுதாரர்களின் சாதனங்களில் பெகாசஸ் மால்வேர் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள், உச்ச நீதிமன்றக் குழுவின் முன் ஆஜராகி, அவர்களது தடயவியல் பகுப்பாய்வு விவரங்களை வழங்கினர்
இரண்டு ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் ஏழு பேரின் ஐபோன்களை ஆய்வு செய்துள்ளார். அதில் இருவரது மொபைல் பெகாசஸ் செயலியின் தடம் இருப்பதை கண்டறிந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரிவித்தார்.
இரண்டு நபர்களின் சாதனங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவை நீக்கிய பிறகு, ஏப்ரல் 2018 இல் மனுதாரர்களில் ஒருவரின் செல்போனில் பெகாசஸ் செயலி ஊடுருவலையும், மற்றொரு போனில் 2021 ஜூன் மற்றும் ஜூலை காலக்கட்டத்தில் மால்வேர் ஊடுருவலின் பல தடயங்களை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற குழு முன் வாக்குமூலம் அளித்த அந்த நிபுணர், மார்ச் 2021 இல் பல முறை நடைபெற்ற பெகாசஸ் ஊடுருவலை பார்க்கையில், அந்த மால்வேர் மூலம் பிராசஸ் டேபிள் டேட்டாபேஸில் உள்ள என்டீரிஸ்களை டெலிட் செய்ய முயற்சித்துள்ளனர் என்றார்.
மேலும், இந்த வழக்கில் மனுதாரர்கள் ஆறு பேரின் ஆண்ட்ராய்டு போன்களை ஆய்வு செய்த மற்றொரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர், நான்கு போன்களில் வித்தியாசமான மால்வேரின் தடயத்தையும், இரண்டு செல்போனில் ஒரிஜினல் பெகாசஸின் தடயத்தையும் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” எங்களிடம் உள்ள ஆண்ட்ராய்டு எமுலேட்டர் மூலம், போனில் உள்ள மால்வேர் இருப்பை கண்டறிந்தோம். இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது. இதனை முறையான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது. இந்த மால்வேர் உங்கள் சாட்களை படிப்பது மட்டுமின்றி வீடியோஸை எடுப்பது, ஆடியோ அல்லது வீடியோ வசதியை எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்திட முடியும்” என்றார்.
இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் மேற்பார்வையில், மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நியமித்தது.
அந்த குழுவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் பி, இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இன்ஸ்டிடியூட் சேர் அசோசியேட் பேராசிரியர் டாக்டர் அஷ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் உள்ளனர்.
இதற்கிடையில், இந்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி, இந்த குழுவினர் அறிக்கை ஒன்றை வெளிட்டனர். அதில், பெகாசஸ் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என கருதும் நபர்கள், ஜனவரி 7க்கு முன்பு கமிட்டி முன்பு ஆஜராகி தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்படி பெகாசஸ் உளவு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், உங்களது சாதனங்களை சோதனைக்காக ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குழுவினரை சந்தித்த மனுதாரர்கள் சிலர், தங்களது சாதனங்களை சோதனைக்கு ஒப்படைப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், சாதனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கூறுவது அவசியமற்றது. அவர்கள் முன்பாகவே எளிதாக போன் டேட்டாவை காப்பி செய்துவிட்டு, சாதனங்களை ஒப்படைக்கலாம்” என்றனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம், இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் சாப்ட்வேர், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சட்டவிரோதமாக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அப்போதைய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, அஷ்வினி வைஷ்ணவ், இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்று ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலரின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil