மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். இது அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துவரும் 3 ராஜ்யசபா எம்.பி.-க்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 9-ம் தேதியுடன் முடிவடைவதால், அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவில் அவரவர் நம்பிக்கையாளர்களின் சார்பாகவும் எதிராகவும் பிரசாரம் தொடங்கியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய சிங், மற்றும் பாஜக தலைவர்களான பிரபாத் ஜா மற்றும் சத்யநாராயண் ஜதியா ஆகியோருக்குப் பின் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த ஊகங்களும் பேச்சுக்களும் பிரசாரங்களாக இரு கட்சி தலைமையகங்களிலும் உலவி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 16 ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலங்களவை தேர்தல் பாஜக எதிர்க்கட்சியாக இருந்து நடைபெறுகிறது. தற்போதைய கணக்குப்படி அம்மாநிலத்தில் 3 ராஜ்யசபா எம்.பி இடங்களில் காங்கிரஸ் இரண்டு இடங்களை வெல்ல உள்ளது. பாஜகவுக்கு ஒரு இடத்தை பெற வாய்ப்பு உள்ளது.
ஒரு ராஜ்யசபா எம்.பி. வெற்றி பெற 58 வாக்குகள் பெற வேண்டும். 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இறந்ததால் 2 காலியிடங்கள் உள்ளன. சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியில் 114 எம்.எல்.ஏ-க்களும், பாஜக சார்பில் 107 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆளும் கமல்நாத் அரசு 4 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள், ஒரு சமாஜ்வாடி எம்.எல்.ஏ, 2 பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பூசலின் பின்னணியில், கமல்நாத்துக்கு நெருக்கமாக காணப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா, திடீரென மாநிலங்களவைக்கு பிரியங்கா காந்தியை எம்.பி-யாக அனுப்ப வேண்டும் என்று குரல் எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திக்விஜய் சிங் எதிர்ப்பாளரான வர்மா 2014-இல் தனது மாநிலங்களவை வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது, மூத்த தலைவரான திக்விஜய் சிங்குக்கு எதிராக ஒரு அணியை ஏற்படுத்தியிருந்தார்.
வர்மாவின் சமீபத்திய நடவடிக்கை, ராஜ்யசபா எம்.பி. இடத்தை எதிர்பார்க்கும் சிந்தியா மற்றும் தனது எம்.பி பதவியை தொடர விரும்புகிற திக்விஜய் சிங் ஆகிய இருவரின் நிலையை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. பிரியங்கா காந்தியின் பெயரை வர்மா பரிந்துரைத்த உடனேயே முன்னாள் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் உட்பட பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளனர்.
பிரியாங்காவுக்கு ஆதரவாக கட்சி செவி சாய்க்க வேண்டும். அப்படி நடந்தால் மற்றவர்கள் ஒரு எம்.பி இடத்துக்கு போட்டிப் போட வேண்டியிருக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் குணா-சிவ்புரியில் ஏற்பட்ட தோல்விக்கு சமாதானம் செய்வது சிந்தியாவுக்கு கடினமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், அதிக அளவில் விமர்சனங்களும் வருகிறது. ஏனெனில், காங்கிரஸ் கட்சி இதுவரை மாநில காங்கிரஸ் தலைவர் என்பதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. அந்த பதவி தற்போது கமல்நாத்தால் வகிக்கப்பட்டுவருகிறது.
இதனால் சிந்தியா அதிருப்தியாளராக மாறுவார் என்ற தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், பாஜகவைச் சேர்ந்த ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சரை மாநிலங்களவை எம்.பி சீட்டுடன் தனது பக்கம் இழுக்க காவி கட்சி முயற்சி செய்யலாம் என்று கூறினார்.
பாஜகவும் தனக்கான ஒரு ராஜ்யசபா இடத்தை பற்றிய குழப்பத்தில் சிக்கியுள்ளது. பிரபாத் ஜா இரண்டு முறை மேல் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அவர் மீண்டும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டால் அவரை நியமனம் செய்வது குறித்தும் யூகங்கள் பரவி வருகின்றன. சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த காலங்களில் மத்தியில் பதவி வகிப்பது பற்றி விருப்பமின்மையை வெளிப்படுத்தியதோடு, மாநில அரசியலில் தான் மிகவும் சௌகரியமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மத்தியப் பிரதேச பாஜக வட்டாரங்களில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் பெயரும் அடிபடுகிறது.