/indian-express-tamil/media/media_files/2025/06/20/pondy-protest-against-war-2025-06-20-16-53-22.jpg)
'அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனவெறி இஸ்ரேல் அரசே, பாலஸ்தீன மற்றும் ஈரான் மக்கள் மீது குண்டுகள் வீசுவதை நிறுத்து!' என்ற கண்டன முழக்கத்துடன், இன்று புதுச்சேரி சுதேசி மில்
அருகில் ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரான் மீது அமெரிக்காவின் துணையோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் தொடுத்து குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாகக் குற்றம் சாட்டி, ஈரான் மீது கடந்த ஒரு வாரமாகத் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்காவின் துணையோடு நடைபெற்று வரும் இந்த அத்துமீறிய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இது மற்றொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன. கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆகவே, அனைத்து உலக நாடுகளும் இஸ்ரேலின் இந்த அராஜகமான, தாக்குதலை உடனே நிறுத்தி உலக அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்று ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மையத்தின் புதுச்சேரி பிரிவு கேட்டுக்கொண்டது.
மத்திய கிழக்கு ஆசியாவில் பெட்ரோல் எரிபொருள் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஜி-7 நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற சூழலை உருவாக்கி, பூமிப்பந்தை போர்க்களமாக மாற்றிட திட்டமிட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் ரத்தினம் தலைமை தாங்கினார். பேராசிரியர் நா. இளங்கோ, லெனின் துரை, வழக்கறிஞர் சிவக்குமார் (AIUTUC), மேகராஜ், சண்முகம், கவிஞர் தமிழ் ஒளி வட்டம் சாரதி (அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம்), மாநிலக்குழு உறுப்பினர் அருள், சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.