குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், மேகாலயா, மும்பை, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மும்பை, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அஸ்ஸாம் குவஹாத்தியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பரகனாஸ் மாவட்டங்கள் மற்றும் கிராமப்புற ஹவுராவில் இருந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தமனி சாலைகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை 34 முர்ஷிதாபாத்தில் தடுக்கப்பட்டது. மாவட்டத்தில் மேலும் பல சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
போராட்டங்களால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், சவுத் ஈஸ்டர்ன் 7 ரயில்கலை ரத்து செய்து அறிவித்தது. சவுத் ஈஸ்டர்ன் ரயில்வேயின் காரக்பூர் டிவிசன் வெள்யிட்டுள்ள செய்திக்குறிப்பில், போராட்டங்கள் காரணமாக, டிசம்பர் 14 ஆம் தேதி இயக்கப்பட இருந்த 1. ஹௌரா - திருப்பதி ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ், 2. திருப்பதி - ஹௌரா ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ், 3.ஹௌரா - எர்ணாக்குலம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், 4. ஹௌரா - எம்.ஜி.ஆர் சென்னை செண்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், 5. ஹௌரா - யெஸ்வந்த்பூர் துரந்த்தோ எக்ஸ்பிரஸ், 6.ஹௌரா - ஹைதராபாத் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் டிசம்பர் 16 ஆம் தேதி இயக்கப்பட இருந்த 7.ஹைதராபாத் - ஹௌரா ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது என்றும் இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.