Protests against Kerala SilverLine grow; in village after village, concern over ‘secrecy’: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாடு கிராமத்தில், சாலையின் ஓரத்தில், ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தின் அடையாளமாக செவ்வக தடுப்புக் கல் நடப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில், இரவு நேரத்தில் நடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
“தடுப்பு எதற்காக என்று அவர்களிடம் கேட்டபோது, சாலையை அகலப்படுத்துவதற்காக என்று சொன்னார்கள். அவர்கள் சில மண் மாதிரிகளையும் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்,” ஆனால் இது “கேரள ரயில் திட்டத்தின் கணக்கெடுப்புக்காக இது நிறுவப்பட்டது என்பதை நாங்கள் பின்னர் கண்டுபிடித்தோம். இது அனைவருக்கும் பயன் தரும் நேர்மையான திட்டம் என்றால், பொய் சொல்வது ஏன்? ஏன் இவ்வளவு ரகசியமாக இருக்க வேண்டும்?” என்று சாலையோரத்தில் குடியிருக்கும் மஞ்சுஷா கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளா முழுவதும், பினராயி விஜயன் அரசின், அரை-அதிவேக ரயில் வழித்தடத்தை அமைக்கும் திட்டமான ‘சில்வர்லைன்’ மீது நம்பிக்கையின்மை மட்டுமே வளர்ந்துள்ளது.
கேரள இரயில் மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம், மாநிலத் தலைநகரான தெற்கே திருவனந்தபுரத்திலிருந்து வடக்கில் உள்ள ஒரு நகரமான காசர்கோடு வரை ரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் வழிப்பாதையை வழங்குவதாகும். இது 530-கிமீ தூரத்தை கடக்க எடுக்கும் நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து நான்கிற்குள் குறைக்கிறது. கேரளாவின் சாலைகளின் நெரிசலைக் குறைக்கவும், நிலையான பயண விருப்பத்தை வழங்கவும், மேலும், உள்கட்டமைப்பு முன்னேற்றத்தை செயல்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கவும் இது உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், மாநிலத்தின் பெரிய பிரிவினருக்கு, 63,940 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் உருவாக்கப்படுவதில் பேரிழப்பாகும். இதில் கேட்கப்படும் கேள்விகள்: கடனில் மூழ்கியிருக்கும் மாநிலம் எப்படி திட்டத்தை நிறைவேற்ற முடியும்; காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் மாநிலத்தின் சுற்றுச்சூழல் செலவு என்னவாக இருக்கும்; ரயில் சேவையை கட்டுவதற்கு ஆகும் செலவுக்கு டிக்கெட் விலை கட்டுப்படியாகுமா; மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் என்ன. இது குறித்தான ஆலோசனை இல்லாததுதான் பெரிய கவலை.
“2020 ஆம் ஆண்டில், உத்ராடம் நாளில் (ஓணம் பண்டிகையின் முக்கிய நாளுக்கு முன்பு), கே-ரயில் பாதை சீரமைப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட நில சர்வே எண்களைக் கண்டறிய உள்ளூர் செய்தித்தாள்களைத் திறந்தோம். அதனால்தான் எங்கள் வீடுகள் இடிக்கப்படும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம், ”என்று பெயின்டிங் வேலைகளைச் செய்யும் சுபேஷ் கூறுகிறார். கட்டி 2 ஆண்டுகளே ஆகியுள்ள அவரது வீடு ரயில் வழித்தடத்திற்குள் வருகிறது. சுபேஷ் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அவர்களுக்கு இது பற்றி தெரியவில்லை.
தன் வீடு இடிக்கப்படும் என்பதை அறிந்த மஞ்சுஷா, தன் குழந்தைகளிடம், "நான் தற்கொலை செய்து கொள்ளலாம், ஆனால் வீடற்ற உங்களுடன் தெருவில் இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.
மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் ‘சம்ஸ்தானா கே-ரயில் சில்வர்லைன் விருத்த ஜானகிய சமிதி’யின் ஆலப்புழா மாவட்டத் தலைவரான சந்தோஷிடம் இவரை போன்றவர்கள் முறையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராக சமிதி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. சந்தோஷ் உட்பட குறைந்தது 20 சமிதி உறுப்பினர்கள், கொரோனா நெறிமுறைகளை மீறிய மற்றும் அரசாங்கப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கப்பட்டனர், தடுத்து வைக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாட்டிலேயே மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கேரளாவில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி), நிலம் கையகப்படுத்துதல் என்பது உள்கட்டமைப்பு திட்டங்களில் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். பெரிய தொகையில் நிலம் இருப்பதால், குடும்பங்கள் வீடுகள் கட்ட பெரிய கடன்களை வாங்குகின்றன. கடந்த ஆண்டு, உள்நாட்டு ஏஜென்சியான இந்தியா ரேட்டிங்ஸ், அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வை மேற்கோள் காட்டி, 47.8% என்ற அளவில், நகர்ப்புற குடும்பங்களிலேயே கேரளாவில்தான் அதிக அளவில் கடன் உள்ளது என்று கூறியது.
நூரநாட்டில் உள்ள மூத்த எதிர்ப்பாளர்களில் ஒருவரான இந்திரா பாய், இது பணத்தைப் பற்றியது அல்ல என்று கூறுகிறார். மேலும், "அவர்கள் கோடி கொடுத்தாலும் எங்களுக்கு அது வேண்டாம்." என்கிறார்
கொச்சியை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவின் (CPPR), பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPPR) நிறுவனர்-உறுப்பினரான தனுராஜ், பொது மக்கள் தங்கள் கனவை "விற்க" வேண்டும் என அரசாங்கம் நினைக்க முடியாது என்கிறார். மேலும், "இன்றைய நாட்களில் பொதுமக்கள் அதிக தகவல் பெற்றுள்ளனர் மற்றும் கேள்விகளைக் கேட்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.
CPPR க்கான ஒரு கட்டுரையில், தனுராஜ் மற்றும் மூத்த அசோசியேட் நிஸ்ஸி சாலமன், கேரளாவின் 'அதிக நகரமயமாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பில்', மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70% சேவைத் துறையில் இருந்து வருகிறது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகள் முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளன. இந்த காரணிகள் "வழக்கமான அடிப்படையில் வெகுஜன பயணத்தின் தேவையை குறைத்துள்ளன" என்று வாதிட்டனர்.
இதை மறுத்து, கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான டி எம் தாமஸ் ஐசக், அதிக வருமானம் கொண்ட கேரளாவில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதாக சுட்டிக்காட்டுகிறார். “எங்களிடம் உள்ள எந்த சாலைகளையும், ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தினாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெரிசல் இருக்கும். இதற்கான பதில் சில்வர்லைன் என்றார்.
சிபிஎம் ராஜ்யசபா எம்பி எளமரம் கரீம், நிதி சாத்தியமற்றது என்ற வாதம் தவறானது. "அத்தகைய திட்டத்தின் செலவு மாநில பட்ஜெட்டில் இருந்து வரவில்லை. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் நீண்ட கால கடன்களை வழங்க தயாராக உள்ளன. நிலம் கையகப்படுத்துவதைப் பொறுத்தவரை, அதில் ஒரு பங்கு ரயில்வேக்கு சொந்தமான நிலம். இது கேரள அரசு மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியாகும். மேலும், ஆரம்பத்தில் எல்லாப் பணமும் தேவையில்லை... மேலும், செயல்பாடுகள் தொடங்கும் போது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடனைச் செலுத்த வருவாயைப் பயன்படுத்தலாம் என்று விரிவான திட்ட அறிக்கை கூறுகிறது என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் உள்ள "அடிப்படைவாதிகள்" அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் எதிர்ப்பதாக கரீம் குற்றம் சாட்டினார். "இங்கே, இரயில் பாதை ஈரநிலங்கள் மற்றும் நெல் வயல்களின் வழியாகச் சென்றால், அங்கு ஒரு உயரமான பாதை அமைக்கப்படும். ஒவ்வொரு 500 மீட்டருக்கும், சுரங்கப்பாதைகள் அல்லது மேல்நிலைச் சாலைகள் இருக்கும்... சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,” என்றார்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்கள் மீதான போராட்டங்கள் கேரளாவில் பல பெரிய-டிக்கெட் திட்டங்களுக்கு முன்பே வழிவகுத்தன. விழிஞ்சம் துறைமுகம் மற்றும் எல்பிஜி கொண்டு செல்லும் கெயில் குழாய் போன்ற சில திட்டங்கள் எதிர்ப்புகளை மீறி அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டாலும், மற்றவை பிளாச்சிமடாவில் உள்ள கோகோ கோலா பாட்டில் ஆலை, ஆரன்முலாவில் ஒரு விமான நிலையம் மற்றும் சைலண்ட் வேலி காடுகளுக்குள் ஆழமான அணை போன்றவை செயல்படுத்தப்படாமல் உள்ளது.
வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் கே.பி.கண்ணன், மாற்றுப் போக்குவரத்து மாதிரிகளை அரசாங்கம் தேடியிருக்கலாம் என்கிறார். “எங்களிடம் ஏற்கனவே நான்கு விமான நிலையங்கள் (மாநிலத்திற்குள்) மற்றும் இரண்டு எல்லைகளில் (மங்களூர் மற்றும் கோயம்புத்தூர்) உள்ளன. கன்னியாகுமரியில் இருந்து மங்களூர் மற்றும் அதற்கு அப்பால் ரயில் பாதை உள்ளது. உள்நாட்டு நீர் அமைப்பு உள்ளது... அரசு அதில் அக்கறை காட்டவில்லை. பெரிய சரக்குகளுக்கு கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கு வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
சில்வர்லைனுக்கான ஜப்பானின் நிலையான பாதை தொழில்நுட்பம் அதை ஒரு "தனிப்பட்ட ரயில் அமைப்பாக" மாற்றக்கூடும் என்றும் கண்ணன் அஞ்சுகிறார். மேலும், "எங்கள் முக்கிய ரயில் நெட்வொர்க்குடன் இதற்கு எந்த தொடர்பும் இருக்காது." என்கிறார்.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களில் சிலவற்றில் வெற்றி பெற்றதற்காக மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் இ ஸ்ரீதரன், இந்தத் திட்டத்தை "தவறான கருத்தாக்கம்" மற்றும் "தொழில்நுட்ப முழுமை இல்லாதது" என்று அழைக்கிறார். கடந்த ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ஸ்ரீதரன், ஸ்டாண்டர்ட் கேஜ் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக அகலப்பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் கூறினார். மேலும், முதல்வர் "உண்மைகளை மறைத்து" மற்றும் "செலவுகளை குறைத்து மதிப்பிடுகிறார்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், முதல்வர் விஜயன் மறுபரிசீலனை செய்வதில் விருப்பம் காட்டவில்லை, உண்மையில் ரயில் திட்டத்தின் பலன்களை விவரிக்கும் விளக்க கூட்டங்களை நடத்தினார். “வளர்ச்சித் திட்டங்களில், சில எதிர்ப்புகள் இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநிலத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ”என்று முதல்வர் ஒரு கூட்டத்தில் கூறினார்.
இந்தக் கூட்டங்களில் சாதாரண குடிமக்கள் கலந்துகொள்வதில்லை, மாறாக இடதுசாரிகளுடன் இணைந்த செல்வாக்குமிக்க பதவிகளில் இருப்பவர்கள் கலந்துகொள்வதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். முதல்வர் கூட்டங்களில் கேள்விகளை எடுத்துக் கொள்வதில்லை, மேலும் குறிப்பிட்ட விஷயங்களைக் காட்டிலும் பொதுவான அம்சங்களைப் பற்றி பேசுகிறார்.
ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஒரு வட்டாரம், “அமைச்சர்களே தங்களுக்கு இந்தத் திட்டம் வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால், முதல்வரை எப்படி சமாதானப்படுத்துவது? அவர்களுக்கு தைரியம் இல்லை." என்று கூறினார்.
நூரநாட்டைப் போலவே சிபிஎம் தொண்டர்களும் தலைவர்களும் இத்திட்டத்தைப் பற்றி பேச மறுக்கின்றனர்.
ஆனால் இது மஞ்சுஷாவுக்கு ஆறுதலாக இல்லை. “எனது பெற்றோர் இருவரும் இடதுசாரிகளின் தீவிர ஆதரவாளர்கள். அந்த இலட்சியங்களை நம்பித்தான் நான் வளர்ந்தேன். ஆனால் இன்று நான் ஏமாந்து போனதாக உணர்கிறேன். என்று மஞ்சுஷா கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.