கர்நாடக மாநிலத்திற்கு மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் 90 சதவீத வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க நேற்று இரவு முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. புது முகங்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடக பா.ஜ,கவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சரும் கர்நாடகா தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான், மூத்த பா.ஜ.க தலைவர் அருண் சிங், தமிழக மாநிலத் தலைவர், கர்நாடகா தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை தலைமையிலான குழுவினர், மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 189 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டனர்.
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 52 புது முகங்கள் களம் காண்கின்றனர். மொத்த பட்டியலில், 32 பேர் ஓ.பி.சி பிரிவிலும், 30 பேர் எஸ்.சி பிரிவிலும், 16 பேர் எஸ்.டி பிரிவிலும் உள்ள வேட்பாளர்கள். 8 பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இந்த முறை அதிகப்படியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.
இந்தநிலையில் மூத்த தலைவர்கள் பலருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சாவதி பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் துணை முதல்வர்வரும் , எம்.எல்.சியாகவும் இருக்கும் லக்ஷ்மண் சாவதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்தானி தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் சாவதி. 2018 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். எம்.எல்.சியாக உள்ளார். சாவதியின் பரம எதிரியும் பாஜக எம்எல்ஏவுமான ரமேஷ் ஜார்கிஹோலியின் நெருங்கிய கூட்டாளியான சிட்டிங் எம்எல்ஏ மகேஷ் குமடஹல்லிக்கு பா.ஜ.க சாதகமாக உள்ளது என குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“