டெல்லியைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘பீரியட் பீஸ்ட்’ நிகழ்ச்சியில் 28 பெண்கள் அடங்கிய குழு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியது. மாதவிடாயைச் சுற்றியுள்ள மூடநம்பிக்கை கட்டுக்கதைகளை உடைப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என்று தெரிவித்தனர்.
அண்மையில், குஜராத்தில் உள்ள புஜ் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகளை மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சாமியார் ஒருவர், “மாதவிடாய் நாட்களில் தங்கள் கணவர்களுக்கு உணவு சமைக்கும் மாதவிடாய் பெண்கள் அடுத்த வாழ்க்கையில் நாய்களாகப் பிறப்பார்கள் என்றும் அதே நேரத்தில் மாதவிடாய் பெண்கள் சமைக்கும் உணவை உட்கொள்ளும் ஆண்கள் காளைகளாக மறுபிறவி எடுப்பார்கள்” என்று பேசினார். சாமியாரின் பேச்சு வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாதவிடாய் பற்றிய பொதுவான தவறான கருத்துக்களைத் களைவதற்காக ‘சச்சி சஹேலி’ நிறுவனர் டாக்டர் சுர்பி சிங் என்பவரால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சுர்பி சிங் கூறுகையில், “சுவாமி கிருஷ்ணஸ்வரூப் கூறிய கருத்துகளைக் கேட்டபின், இப்போது ஒருவர் பேசவில்லை என்றால், அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்று நான் உணர்ந்தேன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் டாட் காம் இடம் கூறினார். மேலும், “மாதவிடாய் கால பெண்களால் தயாரிக்கப்படும் உணவை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று அறிவிப்பதன் மூலம் இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்த முடிவு செய்தேன், இந்த உணவை சாப்பிடுவதன் மூலம் எந்த வித்தியாசமும் இல்லை.” என்று கூறினார்.
பூஜ் பகுதியில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் மடத் தலைவர் கிருஷ்ணாஸ்வரூப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொது, கணவருக்கு உணவு சமைக்கும் மாதவிடாய் பெண்கள் அடுத்த பிறவியில் நாய்களாகப் பிறப்பார்கள் என்றும் பெண்கள் தயாரித்த உணவை உட்கொண்ட ஆண்கள் காளைகளாக மறுபிறவி எடுப்பார்கள்” என்று கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிகழ்வைப் பற்றி சுர்பி சிங் கூறுகையில், “நான் செய்ததெல்லாம் சமூக ஊடகங்களில் பதிவிடுவதுதான். அதற்கு மக்கள் பதிலளித்தனர். பலர் இதற்கான காரணத்தை ஆதரித்து சமைத்த உணவை சாப்பிட்டார்கள் என்பது அத்தகைய தவறான கருத்துக்களைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதற்கு சான்றாகும். இதுபோன்ற பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இதனால் இந்த யோசனை வலுப்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
சுர்பி சிங்கின் இந்த செயல் ஒட்டுமொத்தமாக நேர்மறையான கம்மெண்ட்டைப் பெற்றாலும், சிலர் இந்த நிகழ்வை விமர்சித்து இதை பிரசாரம்" என்றும் கூறுகின்றனர்.
பீரியட் பீஸ்ட் நிகழ்வில் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் சமூக ஆர்வலர் கம்லா பாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.