PUBG ban Across Rajkot : குஜராத் மாநிலம் முழுவதும் பப்ஜி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்கோட் பகுதியில் பப்ஜி விளையாடிய 10 இளைஞர்கள் மீது காவல்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்களின் ஸ்மார்ட்போன்க்ளை விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளது.
PUBG ban Across Rajkot
காவல் ஆணையம் மனோஜ் அகர்வால் கடந்த 6ம் தேதி ராஜ்கோட் நகர் முழுவதும் பப்ஜி கேம் விளையாடுவதற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. அன்றிலிருந்து 12 புகார்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரையும் இதுவரையிலும் கைது செய்யவில்லை. மாறாக வழக்கு பதிவு செய்து காவல் துறை அந்த இளைஞர்களை பெயிலில் அனுப்பி வைக்கிறது. பின்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அனுப்புவது வழக்கமாக உள்ளது.
ஆனால் நேற்று (13/03/2019) ராஜ்கோட் சிறப்பு பிரிவு மூன்று இளைஞர்களை பப்ஜி விளையாடியதற்காக போலீஸ் குடியிருப்பு பகுதியிலேயே கைது செய்துள்ளது. அவர்கள் மீது ஐ.பி.சி 188 பிரிவு மற்றும் குற்றப்பிரிவு 35 மற்றும் குஜராத் காவல் சட்டம் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 10 நபர்களில் 6 நபர்கள் கல்லூரிகளில் படித்து வருபவர்கள். நேற்று கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
செவ்வாய் கிழமை தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ராஜ்கோட் தாலுகா காவல் துறை அதிகாரி வி.எஸ். வன்சாரா அறிவித்துள்ளார்.
பப்ஜி மற்றும் மோமோ போன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் இளைஞர்களின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரையும் அடிமையாக மாற்றிவிடுகிறது. பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக ராஜ்கோட் காவல்த்துறை அறிக்கை வெளியிட்டது.
மேலும் படிக்க : “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்” மோடி குறிப்பிட்ட பப்ஜி கேம் : சில சுவாசிய தகவல்கள்…