பப்ஜி வீடியோ கேமை, தொடர்ந்து 6 மணிநேரம் விளையாடியதால் ஏற்பட்ட நெஞ்சுவலியை தொடர்ந்து 16 வயது சிறுவன் பலியான சம்பவம், மத்திய பிரதேசசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைய தலைமுறையினர் இன்டர்நெட், வாட்சப், பப்ஜி வீடியோ கேம் என தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களால் இதிலிருந்து எளிதில் மீளவும் முடிவதில்லை. சிலசமயங்களில், இவர்கள் உயிர்ப்பலிக்கும் ஆளாகின்றனர். அப்படிபயொரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியை சேர்ந்தவர் பர்கான் குரேஷி, 16 வயதான பர்கான், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பர்கான், பப்ஜி வீடியோகேமிற்கு அடிமையாகி இருந்தான். சம்பவநாளன்று ( மே 28), மதிய உணவை முடித்த பர்கான், பப்ஜி விளையாட துவங்கினான். 6 மணிநேரமாகியும் தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தான். குழுவாக விளையாடும் இந்த விளையாட்டில், மற்ற நண்பர்கேளாடு கத்தியபடியும், கூச்சலிட்டபடியும் விளையாடி கொண்டிருந்த பர்கான், ஹெட்செட்டை கழட்டி எறிந்துவிட்டு, நான் உன்னோடு விளைளயாட மாட்டேன். உன்னால் தான் நான் தோற்றேன் என்று கத்தியபடி மூர்ச்சையற்று கீழே சரிந்தான்.
உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் உதவியுடன் பர்கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனை செய்த டாக்டர்கள், பர்கான் மரணமடைந்ததை உறுதி செய்தனர். இதயநோய் நிபுணர் டாக்டர் அசோக் ஜெயின் கூறியதாவது, பர்கானை இங்கே அழைத்துவரும்போதே அவனுக்கு இதயத்துடிப்பு இல்லை. எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து இதயம் மறுபடியும் துடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டோம், ஆனால், அது பலனளிக்கவில்லை.
பர்கான் சிறந்த நீச்சல் வீரர் என்றும், அவன் தன் உடல்நலத்தை சிறப்பாக பேணிவந்ததாக அவனது குடும்பத்தினர் கூறினர். பப்ஜி விளையாட்டின் மீதிருந்த மோகத்தால் அதில் தன்னை இழந்து உணர்ச்சிகளின் மிதமிஞ்சிய வெளிப்பாட்டால், ஒருகட்டத்தில் அவனது உடலில், அட்ரீனலின் அதிகமாக சுரந்ததால், அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக டாக்டர் அசோக் ஜெயின் கூறினார். குழந்தைகள், இதுபோன்ற விளையாட்டுகளிலிருந்து விலகியிருக்க பெற்றோர்கள் வலியுறுத்தவேண்டும் என்று அவர் வேண்டுகோளும் விடுத்தார்.
பர்கானின் சகோதரர் முகமது ஹாசிமும் இந்த விளையாட்டிற்கு அடிமை ஆகியிருந்தார். ஒருநாளைக்கு 18 மணிநேரம் அவர் இந்த விளையாட்டை விளையாடியுள்ளார். பர்கானின் மரணத்திற்கு பிறகு, இந்த விளையாட்டு செயலியை, தனது போனிலிருந்து அழித்துவிட்டதாக ஹாசிம் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், இந்த விளையாட்டின் மூலம் ஏற்படும் குறைபாடுகளால், குழந்தைகளின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.