Puducherry: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுமி கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், ஆட்சியாளர்கள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளம் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடற்கரை சாலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ஆளுநர் மாளிகை முற்றுகை
இதனிடையே, கடற்கரை சாலை அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள் கடையை மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆளுநர் மாளிகை அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து வியாபாரிகளை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதுவை அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“