/indian-express-tamil/media/media_files/2025/06/27/puducherry-adi-dravidian-2025-06-27-19-55-23.jpg)
புதுச்சேரி பா.ஜ.க. அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா; அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்கள், காங்கிரஸ் 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர். புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில்தான் புதுச்சேரியில் பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 30-ம் தேதி மாநிலத் தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். மற்றொரு புறம் அக்கட்சியில் கட்சியில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதில் முதல் கட்டமாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் இன்று (27.06.2025) மதியம் பெறப்பட்டது. பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் வெங்கடேசன், அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் சபாநாயகர் செல்வத்திடம் தங்களது ராஜினாமா கடிதத்தை இன்று கொடுத்தனர்.
அதே சமயம் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த சாய் சரவணகுமார் ஆவார். இந்நிலையில் சாய் சரவணகுமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவிக்கையில் கட்சி தலைமை கேட்டுக் கொண்டதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக சாய் சரவணகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இதில் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது பா.ஜ.க. தலைவராக இருக்கும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த செல்வ கணபதியை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் சரவணனுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்க தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், அந்தப் பதவிக்கு நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வி.பி.ராமலிங்கம் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர். இன்னொரு பக்கம் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய நமச்சிவாயமும் முதல்வர் கனவோடுதான் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தார். ஆனால், அவருக்கு முதல்வர் பதவியோ? துணை முதல்வர் பதவியோ? கிடைக்கவில்லை. அவரும் மாநிலத் தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ராமலிங்கம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் குமார் இருவரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி உறுதி என்கிறார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.