புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை மீண்டும் திறக்க ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள் முயன்ற நிலையில், அதற்கு அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
/indian-express-tamil/media/post_attachments/af901267-68f.jpg)
கடந்த 3 தினங்களுக்கு முன் வில்லியனூர் பைபாஸ் சாலை சந்திப்பில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் புதிய வெண்கல திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை நிறுவ உதவிபுரிந்த முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு அ.தி.மு.க சார்பில் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களால் திறக்கப்பட்ட சிலை நிகழ்வை பொருத்துக்கொள்ள முடியாமல் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கழக துரோகிகள் தங்களின் மலிவு விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட சிலையை மீண்டும் திறந்து, புதிய கல்வெட்டு வைக்க முயற்சி செய்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/eb93a04d-b3d.jpg)
காவல்துறையின் உறுதியான நடவடிக்கையால் தீய சக்திகளின் தகாத செயல் முறியடிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலையை மீண்டும் திறக்க முயற்சித்தது எம்.ஜி.ஆரின் புகழுக்கும், பெயருக்கும் களங்கமும் ஏற்படுத்தும் செயல் என்பதை கூட புரிந்துகொள்ளாமல் தங்களின் சுய நலத்திற்காக இத்தகைய தகாத செயலை செய்ய முற்பட்டார்கள்.
சிலை அகற்றப்பட்டதில் இருந்து சிலை நிறுவப்பட்டது வரை ஒரு துரும்பைகூட எடுத்து போட முன்வராதவர்கள் தற்போது மீண்டும் சிலையை திறப்பேன் என எந்த அடிப்படையில் வந்தார்கள் என்று தெரியவில்லை. சிலை நிறுவப்பட்ட உடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகின்றனர். அதுபோல் இவர்களும் மலரஞ்சலி செலுத்திவிட்டு சென்றிருக்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/e9bdcf9e-ea0.jpg)
அதைவிட்டுவிட்டு 3 தினங்களுக்கு முன் திருமணமான ஒரு பெண்ணிற்கு மீண்டும் நானும் தாலிகட்டுவேன் என அடம்பிடிப்பது போல் ஓ.பி.எஸ் அணியினருடைய செயல்பாடு உள்ளது. எம்.ஜி.ஆரின் மீது இவர்களுக்கு உண்மையில் பற்று இருந்தால் இன்னும் 10 இடத்தில் கூட இவர்கள் அவருடைய திருவுருவச்சிலையை நிறுவி ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களை திறந்துகொள்ளட்டும்.
எம்.ஜி.ஆரின் சிலை அமைந்த 1996-ம் ஆண்டு கட்சியிலேயே இல்லாத நபர் எம்.ஜி.ஆரின் சிலை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது. திறக்கப்பட்ட சிலையை மீண்டும் திறப்பேன் என காவல் துறையினரிடம் அடம்பிடித்து கொண்டிருந்தது அநாகரீகத்தின் உச்சகட்டமாகும். இதுபோன்ற நபர்களால் அந்த வெண்கல சிலைக்கு ஆபத்து கூட ஏற்படலாம். எனவே காவல்துறையினர் அந்த சிலையை யாராவது சேதப்படுத்தும் நோக்கத்துடனோ, மறுபடியும் சிலையை திறப்பேன் என்ற எண்ணத்திலோ புதியதாக ஏதாவது செய்ய முற்பட்டாலோ அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் அரசியல் வரலாற்றில் காணாமல் போன சரித்திரம் உள்ளது. அ.தி.மு.க.,வை பற்றியோ, எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கவோ தகுதியற்ற நபர்கள் திட்டமிட்டு எம்.ஜி.ஆரின் சிலையை மையப்படுத்தி கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திறந்த சிலையை மீண்டும் திறப்பேன் என விளம்பரம் கொடுத்தது வெட்கக்கேடான செயல் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.