/indian-express-tamil/media/media_files/2025/02/15/xs9mCoo9gtxgGayxtXdk.jpg)
புதுச்சேரி மாநிலம் சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பொதுமக்கள் பயம் கலந்த பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை தற்போது முழுமையாக சீர்கெட்டு மாநிலம் முழுவதும் மக்கள் பயம் கலந்த பீதியோடு வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காவல்துறையின் முறையான கண்காணிப்பு இல்லாததே முதல் காரணமாகும். காவல்துறையில் நீண்ட நாட்களாகவே உயர்மட்ட அதிகாரிகளிடம் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
குற்றம் செய்தவர்களுக்கு குற்றத்திற்கு உரிய தண்டனைகளை பெற்று தருவதில் காவல்துறை சில ஆண்டுகாலமாக முழுமையாக தவறி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை காவல்துறை தலைவர் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்களின் செயல்பாடுகளை காவல்துறை கண்காணிப்பதில் அலட்சமாக இருப்பது சட்டவிரோத செயல்கள் நடைபெற ஏதுவாக மாறியுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் துடிப்புமிக்க இளம் காவலர்களும், காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் ஈடுபாடுடன் செயல்பட்டால் தான் குற்ற பின்னணிகளை தடுத்து நிறுத்த முடியும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் 90-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. நேரடி நியமனம் மூலம் படித்த இளைஞர்கள் உதவி ஆய்வாளர்ககளாக பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதால் சட்டம் ஒழுங்கை துடிப்புடன் முன்கூட்டியே தடுக்கும் திறன் காவல்நிலையங்களில் இல்லாமல் உள்ளது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல்துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஒரே நேரத்தில் 3 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி மக்களிடம் மறைவதற்குள் புதுச்சேரி தவளக்குப்பத்தில் பாஜகவின் விவசாய அணி துணை தலைவரால் நடத்தப்படும் தனியார் பள்ளியில் 7 வயது சிறுமி அங்கு பணி செய்யும் உடற்பயிற்சி ஆசிரியரால் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பள்ளியில் இது சம்பந்தமாக நியாயம் கேட்கும் போது அங்கு வந்த காவலர்களில் சிலர் பெற்றோர்களை தடியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
குற்ற பின்னணி உள்ள பள்ளியின் உரிமையாளர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களையே தாக்கி தங்களது பாஜக விசுவாசத்தை காவல்துறையினர் அறங்கேற்றியுள்ளனர். நேற்று இரவு வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து காவல்துறையால் புகார் கூட பெற முடியாத ஒரு அசாதரனமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டு அந்த மீனவ கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நள்ளிரவு வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிப்புக்கு உள்ளான குழந்தை பாலியல் வன்முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அரசு மருத்துவரை கொண்டு ஆய்வு செய்து குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் உரிய தண்டனையை அந்த நபருக்கு பெற்றுத்தர வேண்டும். முத்தியால்பேட்டையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு போதை ஆசாமியால் பாலியல் வன்முறை செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட ஆசாமிக்கு இன்று வரை தண்டனையை அரசால் பெற்றுத்தர முடியவில்லை.
அது போன்று இப்பிரச்சனையிலும் அரசு மெத்தனமாக இருக்க கூடாது. அந்த பள்ளியில் ஏற்கனவே பல பாலியல் அத்து மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பள்ளி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனைத்தையும் மூடி மறைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் இந்த சமுதாய மக்களுக்கு நியாயத்தை தர்மபடி பெற்றுத்தர வேண்டியது அரசின் கடமையாகும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். 7 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்ட போதும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சர் பெருமக்களும் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூற வராதது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். கடைத்திறப்பு, காது குத்தல், திருமணங்கள், கருமாதி இவற்றிற்கு செல்வதற்கு மட்டும் மாண்புமிகு மிக்கவர்களின் கடமையல்ல சமூக, சமுதாய பிரச்சனையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் போது நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வராமல் பதுங்கி செல்வது ஏன்?
புதுச்சேரியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல நேரங்களில் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று கொண்டு வருகின்றது. இவற்றையெல்லாம் பள்ளி நிர்வாகங்கள் மூடி மறைப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். கல்வித்துறை ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்களது குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர முடியும்.
பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் பிரச்சனையால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்த தவிர்க்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் அழைத்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார்,மாநில துணைச் செயலாளர் குமுதன்,மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.