Puducherry AIADMK: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (அக்.3) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ராகுல் காந்திக்கு எதிராக நாராயண சாமி கருத்து தெரிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், “முரண்பட்ட கொள்கைகளை கொண்ட ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தி பிரதமராக கொண்டுவர நிறைவேறாத பணியை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம் என ராகுல்காந்திக்கு எதிரான ஒரு கருத்தை கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை டெல்லிக்கு சென்று ராகுல், சோனியா காந்தியை சந்திக்க வாய்ப்பு கேட்டும் வாய்ப்பு வழங்காத நிலையில் இதுபோன்ற கருத்தை ராகுலுக்கு எதிராக நாராயணசாமி தெரிவித்துள்ளதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டும். எப்பொழுது பேசினாலும் பொய் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சுதந்திரத்தை பெற்றுகொடுத்த கட்சி என்று காங்கிரசை கூறி வருகிறார். சுதந்திரத்தை பெற்று கொடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். நாராயணசாமி இருப்பது இந்திரா காங்கிரஸ்.
இந்திரா காங்கிரசுக்கு சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜனநாயகம் மாநில உரிமை பற்றியெல்லாம் நாராயணசாமி பேசுகிறார்.
நாட்டின் எமர்ஜென்சியை கொண்டுவந்தது இந்திரா காங்கிரஸ் தான். 356ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு அரசை ஆட்சியில் இருந்து அகற்றியவர்கள் இந்திரா காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இவர்களுடன் திமுக கூட்டணி அமைத்து பொய்யை கூறி வருகின்றனர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையக்கூடிய கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும். பிரதரை தேர்ந்தெடுக்கும் கட்சியாக அதிமுக உயரும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“