/indian-express-tamil/media/media_files/2025/08/17/puducheg-2025-08-17-19-21-03.jpg)
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் புற்று ஈசல் போன்று தொடங்கப்பட்டிருக்கும் ரெஸ்டோபார்களில் நடைபெற்ற கொலை சம்பந்தமாக காவல்துறை, கலால் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அரசியல் ரெஸ்டோ பார்கள் நடத்துவதற்கு காவல்துறை மூலம் எவ்வித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. மாறாக ரெஸ்டாரண்டுகளில் உணவு சாப்பிட வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய மட்டும் இரவு 12 மணி வரை டூரிஸ்ட எப்.எல் 2 என்ற லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்களுக்கு வேண்டிய ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் அரசின் எந்த துறையின் அனுமதியும் வழங்கப்படாமல் கிளாசிக்கல் மியூசிக், அரைகுறை நாட்டியம், ஆண் பெண் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துகின்றனர்.
இது போன்று நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கட்டணமாக ஆண்,பெண் இருவரும் ஜோடியாக வந்தால் ஒரு ஜோடிக்கு 3000 எனவும், ஆண் மட்டும் தனியால் வந்தால் 2000 எனவும், அரைகுறை ஆடையுடன் வரக்கூடிய பெண்ணுக்கு கட்டணம் இலவசம் என்றும் அறிவித்து நடத்தப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் ரெஸ்டோ பார்களில் உள்ளாட்சி நிர்வாகம் முறையான கேளிக்கை வரியை விதித்து வசூல் செய்தாலே புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அத்தனை ரெஸ்டோ பார்களிடமிருந்து கடந்த மூன்று வருடத்தில் மட்டும் சுமார் 70 கோடி ரூபாய் அளவில் புதுச்சேரி நகராட்சிக்கு மற்றும் உழவுக்கரை நகராட்சிக்கு வரியாக வந்திருக்கும்.
அதே சமயம், ஒரு ரெஸ்டோ பாரில் இருந்து கூட இந்த இரண்டு நகராட்சி நிர்வாகம் ஒரே ஒரு பைசா கூட வரி வசூல் செய்யாதது திட்டமிட்ட ஊழல் ஆகும். புதுச்சேரி ஆளும் அரசு இந்த ரெஸ்ட்டோ பார்கள் விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்பினால் எவ்வித அனுமதியும் இன்றி நடத்தப்படுகின்ற பல்வேறு நாட்டிய அரைகுறை ஆடை நிகழ்ச்சிகளை தடை செய்து நடத்துபவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் விடியா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அத்தனை துப்புரவு பணியாளர்கள் பணிகளையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று அவர்களின் போராட்டத்தின் பொழுது அறிவித்தார். அதேபோன்று தனது தேர்தல் அறிக்கையிலும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது கடந்த நான்கு ஆண்டுகளாக அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்யப்படாததால் துப்புரவு தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்கள் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என்பதை உணராமல் பாசிச சர்வதிகார ஆட்சி நடத்தும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அவர்களை இரவோடு இரவாக கைது செய்து காவல்துறையை வைத்து அவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இது சம்பந்தமாக திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளோ அல்லது விடுதலை சிறுத்தை கட்சியும் அந்த அட்டவணை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆற்றல்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து கொண்டிருக்கின்றன,
பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்காக அரசியல் செய்வதாக கூறிக் கொண்டிருக்கும் விடுதலைக் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் நிலைபாடு என்பது அந்த மக்களுக்கு துரோகம் இழைப்பதாக இருக்கிறது. எங்களது கழகத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தது போன்று திருமாவளவன் மீது ஒரு சில தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. ஆனால் அவர் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து கொண்டு ஸ்டாலின் அவர்களுடைய வாயக செயல்படுவது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
எத்தனை காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாயாக அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்,மதிமுக, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் இருந்தன. ஆனால் நேற்று தினம் இந்த ஒட்டு மொத்த திமுக கூட்டணி கட்சிகளுக்கும் வாயாக தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எங்களது கழகத்தினுடைய பொதுச் செயலாளரை பற்றி குறை கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்த கூட்டணியை உடைக்க எடப்பாடியார் சதி செய்கிறார் என ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
எப்போது பாஜகவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் செல்லும் இடமெல்லாம் கூடுகின்ற மக்கள் வெள்ளத்தைக் கண்டு திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி பயத்தில் தனது கூட்டணியை உடைப்பதாக ஒரு பிதற்றல் குற்றச்சாட்டை ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பது நகைப்புக்கு இடம் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
அட்டவணை இனத்தைச் சேர்ந்த மக்கள் துப்புரவு பணி செய்யக்கூடியவர்கள் ஏற்கனவே வாங்கிய ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைத்துவிட்டு அவர்கள் பணியின் போது இறந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அட்டவணை இனத்து மக்களுக்கு எதிரான இந்த திமுக அரசுக்கு எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டி அந்த மக்களுக்கு துணையாக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மாபெரும் வெற்றி செய்ய செல்வார்கள் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.