/indian-express-tamil/media/media_files/2025/04/22/L9LAFK9EtrRsdIXByPsT.jpg)
புதுச்சேரியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாத காலமாகியும் திறக்கப்படாத நிலையில், பேருந்து நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது:
மக்களின் வரிப் பணத்தின் மூலம் கட்டப்படும் திட்டப்பணிகள் காலத்தோடு கட்டி முடிப்பதும், கட்டப்பட்ட பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வருவதும் அரசு அதிகாரிகளின் கடமையாகும். எந்த ஒரு கட்டுமான பணிகளும் காலத்தோடு முடிக்கப்படவில்லை என்றால் அப்பணி முடிய கூடுதல் செலவுகளும், கட்டிமுடிக்கப்பட்ட திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவரவில்லை என்றால் நாளடைவில் பயனற்று போகும் சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் நலனுக்காக கட்டிமுடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் காலத்தோடு திறக்கப்படாமல் வீணாகி போய் வருகிறது.
உப்பளம் சட்டமன்ற தொகுதியில் பழைய துறைமுக வளாக பகுதியில் வர்த்தக பயன்பாட்டிற்காக இருந்த குடோன்களில் 3 குடோன்கள் பலகோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. பலகோடி ரூபாய் செலவில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் கட்டப்பட்ட அண்ணா உள்விளையாட்டு அரங்கம் காலத்தோடு திறக்கப்படாமல் பொலிவிழந்து போய் உள்ளது.
கடற்கரை சாலையில் பழைய சாராய ஆலை இருந்த இடத்தில் கடற்கரை மேலாண்மை சட்டவிதிகளுக்கு புறம்பாக பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் பல ஆண்டுகளாகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை. இந்த கட்டிடம் எந்த நோக்கத்திற்காக அரசால் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இந்த இடத்தில் தற்காலிகமாக ஆளுநர் மாளிகை மாற்றப்படும் என்றார்கள். ஓராண்டு ஆகியும் ஆளுநர் மாளிகையும் வரவில்லை. யானையை விலை கொடுத்து வாங்கிவிட்டு யானையின் அங்குசத்தை வாங்காமல் விட்ட கதை போல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டிடம் கட்டப்படுவதும் அதற்கு உரிய மின் இணைப்புகள் காலத்தோடு வழங்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழாய் கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது சுமார் 33 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகளுக்கு பதிலாக வணிக வளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு புதியதாக கட்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட கடைகளை பிரித்து கொடுப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது. பேருந்து நிலையம் விரிவாக்கம் முடிவடைந்து கடந் 4 மாதங்களுக்கு முன் நகராட்சியிடம் பேருந்து நிலையம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது உப்பளம் தொகுதியில் ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிகமாக இயங்கும் பேருந்து நிலையத்தால் மக்கள் சொல்லனா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு தினசரி வரும் பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள் கூட இல்லை. அதனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் ரோடியர்பேட், அங்குநாயக்கர் தோட்டம், ஆட்டுபட்டி ஆகிய பகுதிகளில் பயணிகள் கழிவிடங்களாக பயன்படுத்துகின்றனர். தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்படும் புழுதிகாற்றினால் இப்பகுதி மக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினால் தினசரி மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 3 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டும் இந்த தற்காலிக பேருந்து நிலையம் மாற்றப்படாததால் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் தடை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று பொறுப்பற்ற முறையில் உள்ளனர். இந்த தற்காலிக பேருந்து நிலையத்தால் பாதிக்கப்படும் மக்களின் குறிப்பாக எனது உப்பளம் தொகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மாற்றம் செய்ய இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக வேறு வழியில்லாமல் நடத்துகிறது.
இதில் உள்ள உண்மை நிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணர்ந்த உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து பேசி கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு உள்ள நபர்களின் விருப்பு வெறுப்புகளினால் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளது வருத்தம் அளிக்க கூடிய விஷயமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.