காரைக்காலில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை இரு மடங்காக உயர்த்த நடைபெற உள்ள பொது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், புதுச்சேரி மாநிலம்,காரைக்கால் மாவட்டம், டி.ஆர் பட்டினம், கொம்யூன் பஞ்சாயத்து, வாஞ்சூர் கிராமத்தில் M/S.கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எத்திலீன் டை குளோரைடு மற்றும் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில், தினசரி 3.50 லட்சம் லிட்டருக்கு மேல் நிலத்தடி நீர் உபயோகப் படுத்தப்படுகிறது. இங்கு காஸ்டிக் சோடா ஒரு ஆண்டுக்கு 54750 டன்னும், எத்திலீன் டை குளோரைடு ஒரு ஆண்டிற்கு 84000 டன்னும் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் காஸ்டிக் சோடா 54750 டன்னிலிருந்து 109500 டன்னாகவும், எத்தினால் டை குளோரைடு ஆண்டுக்கு 84000 டன்னிலிருந்து 146000 டன்னாகவும், ஆக தற்போது உற்பத்தித் திறனை 100 சதவிதம் அதாவது இரு மடங்கு அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அதற்காக சுற்றுப் புறச்சூழல் அனுமதியின் ஒரு பகுதியாக பொதுமக்களின் கருத்துக்களை 10-4-20205 அன்று காரைக்கால் மாவட்டத்தில் கேட்கப்படும் என புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரசாயன தொழிற்சாலையிலிருந்து கண்ணுக்கு தெரியாத நச்சு புகைகள் வெளியேறுவதன் மூலம் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, மூலை சுருங்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் அறிவியல் சுகாதாரத் துறை வல்லுநர் குழு ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடிநிரைஉறிஞ்சும் இந்த தொழிற்சாலைக்கு தனது உற்பத்தியை இருமடங்கு உயர்த்துவதன் மூலம் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.குடியிருப்புபகுதியின் மிக அருகாமையில் இந்த நிறுவனம் செயல்படுவதால் இந்த நிறுவனத்தில் என்றாவது வாய்வு கசிவு ஏற்பட்டால் போபால் விஷ வாய்வில் பாதிக்கப்பட்ட மக்கள் போன்று இங்கும் பாதிக்கப்படுவர்.
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற இரசாயன நிறுவனங்களின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த 10-04-2025 காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பொது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக முதலமைச்சர் மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி