சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அ.தி.மு.க சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுவதாகவும், எவ்வித அரசியல் இடையூறும் இன்றி நீதி வழங்கிட சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், "2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து அறிவித்த திட்டங்கள் செயல்படத்தாதது, சட்டம் ஒழங்கு சீர்குலைவு, பாலியல் வன்முறைகள், சிறுமிகள் பலாத்காரம், போலி மதுபான விற்பனைகள், கள்ள விஷ சாராய மரணங்கள், போதைப்பொருட்கள் விற்பனைகள், உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத பிரச்சனைகள் தங்கு தடையின்றி தமிழக தி.மு.க-வினரால் தொடர்ந்து அரங்கேற்றப்படுகிறது. இதனால், தினந்தோறும் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆட்சியில் உள்ள எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத எந்த சமுதாயமும் முற்றிலும் அழிவுப்பாதைக்கு செல்லும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் 2-ஆம் ஆண்டு கல்வி பயிலும் கல்லூரி மாணவி இரவு நேரத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ரவுடி ஞானசேகரனால் சர்வ சாதாரணமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் மீது போலிசாரின் நடவடிக்கையில் குற்றவாளி தி.மு.க-வைச் சேர்ந்தவர் என காவல் துறையால் கண்டறியப்பட்ட உடன் குற்றவாளிக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக காவல் துறை எடுத்தது வெட்கக்கேடான செயலாகும். பாதிக்கப்பட்ட நிகழ்வு சம்பந்தமான புகாரை எப்.ஐ.ஆரில் பதிவு செய்த போலிசார் அதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேர்மாறாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தையே களங்கப்படுத்தி உள்ளனர். இது புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தினருக்கு காவல் துறையால் விடுத்த எச்சரிக்கை நடவடிக்கையாகும்.
குற்றவாளி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் புதல்வர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் . உதயநிதி ஸ்டாலினோடும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியன் அவர்களோடும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியான உடன் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள தி.மு.க பகீரத முயற்சிகளை ஏன் செய்கிறது என்று தெரியவில்லை. மேலும் பாலியல் வன்முறையின் போது தனது செல்போனில் இருந்து குற்றவாளி 'சார்' முடித்துவிட்டேன் என பேசியுள்ளார். அவர் கூறிய அந்த "சார்" யார் என்று இதுவரை தெரியவில்லை. அதற்குள் சிட்டி கமிஷ்னர் குற்றவாளி ஒருவர் மட்டும் என அறிக்கை விடுகிறார்.
எனவேதான், இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் தான் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்கும் என நம் கழக பொதுச் செயலாளர் அறிவித்தள்ளார். இது சம்பந்தமாக கழகம் உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக சுகாதாரத் துறை அமைச்சரும், காவல் துறையினரும் முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குற்ற சம்பவம் குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை தி.மு.க-வின் மீதும், ஆளும் அரசின் மீதும் தெரிவிக்கும் போது தி.மு.க கட்சிக்கு தலைவராகவும், தமிழகத்தை ஆளும் அரசுக்கு முதலமைச்சாராகவம் உள்ள ஸ்டாலின் அவர்கள் இன்று வரை வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்?
குறைந்தபட்சம் குற்றவாளி தி.மு.க-வை சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி அவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவேன் என வாய்திறக்காதது ஏன்? அதைவிட பாதிக்கப்பட்ட அந்த மாணவி சம்பந்தமான குடும்பத்தினருக்கு ஆறுதலாக முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஒரு வார்த்தைக் கூட பேச முன்வராதது ஏன்?
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாய் திறந்தால் தான் நாங்களும் வாய் திறப்போம், அவர் நடந்தால் நாங்கள் நடப்போம், அவர் நின்றால் நாங்கள் நிற்போம், அவர் படுத்தால் நாங்களும் படுப்போம் என்பது போன்ற ஓராம்ச கொள்கையில் தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க, ம.தி.மு.க, பல்வேறு மதவாத கட்சிகள் இவையெல்லாம் வாய்மூடி மௌனம் காக்கின்றனர். இதே தமிழகத்தில் தி.மு.க இல்லாமல் அ.தி.மு.க-வோ, தி.மு.க கூட்டணி தவிர்த்து வேறுகட்சி நபரோ தவறு செய்திருந்தால் இவர்களின் ஆட்டத்திற்கும் பாட்டத்திற்கும் அளவே இருந்திருக்காது, இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சி கூட்டணி என்பது தி.மு.க-விற்கா, அல்லது மக்களுக்கா என்றே புரிந்து கொள்ளாத அளவில் தி.மு.க கூட்டணி கட்சியின் செயல்பாடு உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினால் சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் என்பவர் பிடிபட்டார். அவர் தி.மு.க-வின் பொருப்பாளர் ஆவார். முதல்வர் ஸ்டாலினின் புதல்வரும், துணை முதல்வருமான உதயநிதியோடு வர்த்தக வியாபார விஷயங்களில் பங்குதாரராக உள்ளார். போதை பொருளில் ஈட்டிய பணம் அரசின் பாடநூல் வெளியீட்டு துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச் சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். அங்கு கள்ளச் சாராயம் விற்றவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். இவ்வாண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். அதில் 50- க்கும் மேற்பட்டவர்கள் ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவர்கள். அங்கும் இந்த விஷ கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். இப்படி தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கள் கள்ள விஷ சாராய விற்பனை பாலியல் வன்முறைகள் இவை அனைத்தும் செய்பவர்கள் தி.மு.க-வை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இது சம்பந்தமாக அ.தி.மு.க தொடர்ந்த வழக்கில் மாநில காவல் துறை விசாரணை செய்தால் நீதி கிடைக்காது என்பதை சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தி.மு.க-வின் மடியில் கனம் இல்லை என்றால், தி.மு.க அரசு சி.பி.ஐ விசாரணையை சட்டப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்து ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தினால் உச்ச நீதி மன்றத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என தமிழக தி.மு.க அரசு அப்பீலுக்கு சென்றது, யாரைக் காப்பாற்ற இந்த நாடகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்செய்கிறார்.?
தமிழக தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும பிரபாகரன் என்பவர் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்னால் அச்சத்துடன் பணியாற்ற முடியாது என ராஜினாமாக கடிதம் கொடுத்துள்ளார். ஒரு தலைமைக் காவலருக்கே பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், நடைபெற்று வருகிறத. நீதி மன்ற வாயிலிலேயே கொலைகள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் உள்ளது.
மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கமுடியாத அரசின் நிலை, மக்கள் பயம் கலந்த பீதியோடு அன்றாடம் வாழும் சூழ்நிலை, சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை, இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முடியாத ஒரு பலகீனமான அரசு, அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாத தமிழக அரசு. மனம் போன போக்கில் நிதிநிலையை கருத்தில் கொள்ளாமல் அளவுக்கு அதிகமான கடன் சுமைகளை பெற்று ஊதாரித்தனமாக திட்டங்களை செயல்படுத்தி, அதில் ஊழல் புரிந்து வரும் அரசு தமிழகத்தை ஆட்சி நடத்தும் விடியா திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசாகும். இந்த அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிப்பதற்கு தகுதியற்ற அரசாகும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் திரிபுரா, மணிப்பூர் எங்கேயாவது ஒரு பெண் பாதிக்கப்பட்டால் வாயில் துணி கட்டிக்கொண்டும், பல்வேறு கங்களை நடத்தியும் வேஷம் போடுவார்கள். தமிழக தி.மு.க ஆட்சியில் தி.மு.க கட்சியை சேர்ந்த நபரால் பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிரச்சனையில் வாய் உட்பட அனைத்தையும் மூடிக்கொண்டு மவுனம் சாதிப்பது ஏன்?. இவர்களுக்கு இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.