விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய
தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசிய தமிழக தி.மு.க அமைச்சர் பொன்முடியை கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கலந்து கொண்டு பெண்களை இழிவாக பேசிய பொன்முடியையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பொன்முடியின் உருவ படத்தை கிழித்து தொடப்பக்கட்டை, செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு பொன்முடி வந்தால் அடித்து விரட்டவோம் என தெரிவித்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்காவிட்டால், புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினருடன் சென்று, ராஜ்யசபா எம்பி சண்முகம் தலைமையில் பொன்முடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.